கடந்தாண்டு முதலே எடிட் அம்சத்தை சேர்ப்பது குறித்து ஆராய்ந்து வருவதை ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில், அதற்கான சோதனையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் தகவல்தொடர்புக் குழு, திடீரென எடிட் பட்டன் குறித்து அறிக்கை வெளியிட்டது, மறைமுகமாக எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு காரணமாக, இந்த எடிட் அம்சம் திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதை குறிப்பிடுகிறது.
மஸ்க் ட்விட்டரில் பெரும்பான்மை பங்குதாரராக மாறியுள்ளார். மேலும், சமீபத்தில் ட்விட்டர் இயக்குநர்கள் போர்டிலும் இணைந்துள்ளார். தற்செயலாக, ட்விட்டர் குழு ஏப்ரல் 1 அன்று எடிட் பட்டன் அம்சத்தை குறித்து ட்வீட் செய்தது. ஆனால், எல்லாரும் அதனை April fool என நினைத்தார்கள்.
ட்விட்டரின் தயாரிப்புத் தலைவரான ஜே சல்லிவனின் கூற்றுப்படி, "பாதுகாப்பான முறையில் எடிட் அம்சத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. வரும் மாதங்களில் ட்விட்டர் புளூ லேபல் கொண்ட பயனர்கள் கணக்கில் சோதனை தொடங்கும் என்றார். வாட்ஸ்அப்பில் பீட்டா பயனர்கள் இருப்பது போல், ட்விட்டர் புளூ லேபல் பயனர்கள் உள்ளனர்.
சல்லிவன் தனது ட்விட்டர் பதிவில், தவறுகள், எழுத்துப் பிழைகள் போன்றவற்றை போஸ்டில் திருத்தம் செய்திட பயனர்களின் நீண்ட கோரிக்கையாக எடிட் அம்சம் உள்ளது. நேர வரம்புகள், கட்டுப்பாடுகள் மற்றும் திருத்தப்பட்டதைப் பற்றிய வெளிப்படைத்தன்மை போன்ற விஷயங்களை வரையறுக்காமல் எடிட் பட்டனை அறிமுகம் செய்தால், அதனை பொது உரையாடலின் பதிவை எடிட் செய்து தவறான பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
எனவே, பாதுகாப்பான முறையில் எடிட் பட்டனை அறிமுகம் செய்வதில், சிறிது நேரம் எடுக்கும். இந்த அம்சத்தை கவனமாகவும் சிந்தனையுடனும் அணுகுவோம்.விரைவல் அதற்கான அப்டேட்களை வெளியிடுவோம் என்றார்.
ஏன் இதுவரை எடிட் பட்டன் இல்லை?
ட்விட்டரில் எடிட் பட்டன் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆனால் இந்த அம்சம் இல்லாததற்கு ஒரு காரணம், கடந்த ஆண்டு விலகிய முன்னாள் CEO மற்றும் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தான். எடிட் அம்சம் சேர்ப்பது தொடர்பாக 2020 இல் வயர்ருக்கு பேட்டியளித்த அவர், நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஏனெனில், டோர்சியின் கூற்றுப்படி, ட்விட்டரின் அசல் வடிவமைப்பை மாற்றக்கூடாது என்பது தான். ட்விட்டரை எஸ்எம்எஸ் போல் தான் ஆரம்பித்தோம். அனைவருக்கு தெரியும், sms-ல் செய்துவிட்டால், அதை மாற்ற இயலாது. எனவே, அதேமாதிரியான உணர்வை பயனர்களுக்கு அளிக்க விரும்பினோம் என்றார்.
இருப்பினும், ட்விட்டரில் பதிவிட்ட Kayvon Beykpour, கடந்த காலத்தில் எடிட் அம்சம் முன்னுரிமை பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர்கள் ஒரு கட்டத்தில் கட்டாயம் உருவாக்க வேண்டிய அம்சம். தொழில்நுட்ப உலகில் ஒன்று கிடையாது என சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.