/indian-express-tamil/media/media_files/2025/09/26/aadhaar-address-change-2025-09-26-22-08-16.jpg)
அட்ரஸ் மாறியாச்சா? கவலை வேண்டாம்... ஒரு பைசா செலவில்லாமல் ஆதார் முகவரியை மாற்றலாம்!
நீங்க புதிதாக ஒரு இடத்திற்கு குடியேறி இருக்கிறீர்களா? அப்படியானால், இ-காமர்ஸ் தளங்கள், வங்கிகள், பிற இடங்களில் உங்க முகவரியைப் புதுப்பிப்பதில் பிஸியாக இருக்கலாம். இந்த முக்கியமான மாற்றங்களுக்கு மத்தியில், உங்க ஆதார் அட்டையில் (Aadhaar) உள்ள முகவரியைப் புதுப்பிக்க மறக்க வேண்டாம். உங்க ஆதார் முகவரியை இப்போதே புதுப்பிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், ஆதார் விவரங்கள் துல்லியமாக இருந்தால் மட்டுமே, அதனுடன் இணைக்கப்பட்ட சேவைகளைத் தடையின்றி அணுக முடியும். மேலும், இது ஆள்மாறாட்டம் (Identity Theft) போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் ஆதார் அமைப்பிற்கு (UIDAI) உதவுகிறது.
யு.ஐ.டி.ஏ.ஐ (Unique Identification Authority of India), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. டிசம்பர் 14 வரை எந்தச் செலவும் இல்லாமல் உங்க முகவரி போன்ற மக்கள் தொகையியல் (Demographic) விவரங்களில் மாற்றங்களைச் செய்யலாம். இந்த ஆண்டு ஜூன் 2024-ல் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு, இது 2வது நீட்டிப்பாகும். இந்த இலவச அப்டேட் சலுகை, முகவரி போன்ற மக்கள் தொகையியல் விவரங்களுக்கு மட்டுமே பொருந்தும். கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்களைப் புதுப்பிப்பதற்கு ஆதார் மையத்திற்குச் சென்று கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
நீங்கள் சமீபத்தில் இடம் மாறியிருந்தாலோ அல்லது உங்க ஆதார் விவரங்களில் ஏதேனும் பிழைகளைச் சரிசெய்ய விரும்பினாலோ, அதை ஆன்லைனில் எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். யு.ஐ.டி.ஏ.ஐ-யின் myaadhaar.uidai.gov.in-க்கு செல்லவும். உங்க ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
உங்க ஆதார் சுயவிவரத்தில் காட்டப்படும் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கவும். காலாவதியான தகவல் இருந்தால், புதுப்பிப்பைத் தொடங்கவும். உங்க புதிய முகவரியை உறுதிப்படுத்தும் சரியான முகவரிச் சான்று (PoA) ஆவணத்தை ஸ்கேன் செய்து (JPEG, PNG அல்லது PDF வடிவத்தில், அதிகபட்சம் 2 MB) பதிவேற்றவும். ஆவணத்தைப் பதிவேற்றிய பிறகு, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். புதுப்பிப்பின் நிலையை அறிய உங்களுக்கு சேவை கோரிக்கை எண் (SRN) வழங்கப்படும். புதுப்பித்தல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த SRN எண்ணைப் பயன்படுத்தி நிலையைத் தொடர்ந்து சரிபார்க்கவும்.
யு.ஐ.டி.ஏ.ஐ. இந்திய குடியிருப்பாளர்களைத் தங்கள் ஆதார் விவரங்களை அடிக்கடி புதுப்பிக்க அறிவுறுத்துகிறது. சிறு வயதில் ஆதார் எடுத்த குழந்தைகள், 15 வயதை அடைந்த பிறகு தங்கள் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது மிகவும் அவசியம். விபத்துகள் அல்லது மருத்துவ சிகிச்சைகள் காரணமாக பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றம் ஏற்பட்டவர்களும் உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும்.
அப்டேட் செய்யாவிட்டால் ஏற்படும் சிரமங்கள்:
முகவரி பொருந்தாமல் இருப்பது (அ) பழைய தகவல் இருப்பது நிதிப் பரிவர்த்தனைகள், விமான நிலையங்களில் அல்லது அரசு சலுகைகளைப் பெறும்போதும் சிக்கல்களை உருவாக்கலாம். தவறான மக்கள்தொகை, பயோமெட்ரிக் தரவுகள் காரணமாக அங்கீகாரத் தோல்வி (Authentication Failures) ஏற்பட்டு, ஆதார் பயன்படுத்துவது கடினமாகும். தவறாமல் புதுப்பிப்பதன் மூலம், அரசாங்கம் பாதுகாப்பான தரவுத்தளத்தை பராமரிக்க உதவுகிறது. இது ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், மோசடியையும் வெகுவாகக் குறைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.