நடப்பு ஆண்டில் ராயல் என்ஃபீல்ட் தரப்பில் இருந்து நிறைய புதிய மாடல்கள் அறிமுக செய்யப்பட்டன. எனினும், தனது வேகத்தை ராயல் என்ஃபீல்ட் குறைக்கவில்லை. வரும் ஜனவரி மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் புதிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. கிளாஸிக் 650 மற்றும் ஸ்க்ராம் 440 ஆகிய மாடல்களை சந்தைக்கு கொண்டு வர ராயல் என்ஃபீல்ட் தயாராகி வருகிறது.
முன்னதாக, ஐரோப்பா நாடுகளில் கிளாஸிக் 650 மாடலை ராயல் என்ஃபீல்ட் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மாடல் பைக் இந்தியாவில் விற்பனையாகவுள்ளது. இந்த மாடல் சிங்கிள் சீட்டராகவும், பின்னால் இருக்கும் சீட்டை கழற்றிக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 14.8 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. மேலும், முன்புறம் 43 மி.மீ டெலெஸ்கோப்பிக் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், முன்புறத்தில் 320 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக 648 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளன. 7,250 ஆர்.பி.எம்-ல் 46.4 bhp பவரும், 5,650 ஆர்.பி.எம்-ல் 52.3 என்.எம் டார்க்கும் கொண்டு இயங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் அசத்தலான அப்டேட்டுகளுடன் ஸ்க்ராம் 440 மாடல் ஜனவரி மாதம் சந்தைக்கு வரவுள்ளது. இந்த மாடலில் 443 சிசி ஏர் கூல்ட் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. 6,250 ஆர்.பி.எம்-ல் 25.4 bhpபவரும், 4,000 ஆர்.பி.எம்-ல் 34 என்.எம் டார்க்கும் கொண்டு செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு முந்தைய மாடலை விட 4.5 சதவீதம் பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்த மாடலில் 5 கியர்கள் மட்டுமே இருந்தன. புதிய மாடலில் 6 கியர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 300 மி.மீ டிஸ்க் பிரேக், டுயல் சேனல் ஏபிஎஸ்-உடன் செயல்படும். எல்.இ.டி விளக்குகள், செமி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கூகுள் மேம் வசதியுடன் டர்ன் - பை - டர்ன் நேவிகேஷன் என பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பைக் பிரியர்கள் இடையே இந்த இரு மாடல்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“