ஹேஷ்டேக்குகளின் 12 ஆவது பிறந்த தினம் நேற்று (ஆகஸ்ட் 23) கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் அஜித் நடித்து இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீசான #Viswasam முதலிடம் பிடித்திருக்கிறது. அதே தினத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் டாப் 5 லிஸ்டில் இடம்பெறவில்லை. இதன் மூலம், சமூக தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
இதைத் தொடர்ந்து, முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.
மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான #CWC19 ஹேஷ்டேக் உள்ளது. இந்த உலகக் கோப்பை மட்டும் இந்தியாவில் நடந்திருந்தால், நிச்சயம் இந்த ஹேஷ்டேக் தான் முதலிடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு நடித்து கடந்த மே மாதம் ரிலீசான 'மஹரிஷி' திரைப்படத்தின் #Maharshi எனும் ஹேஷ்டேக் நான்காவது இடம் பிடித்திருக்கிறது.
ஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை Profile Picture-ஆக தேர்வு செய்வோர் பொதுவாக பயன்படுத்தியிருக்கின்றனர். ஹேஷ்டேக் எனும் பாலிசி 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.