ஆதார்- பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்று (ஜுன் 30) தேதியுடன் முடிவடைந்தது. இதனை செய்ய தவறும் பட்சத்தில் இன்று (ஜூலை 1) முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ரூ. 1000 அபராத தொகை செலுத்தி பலரும் தங்கள் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். முன்னதாக அரசு பல முறை ஆதார்- பான் இணைப்பதற்காக அவகாசத்தை நீட்டித்திருந்தது. ஆனால் இம்முறை வரிமான வரித் துறை அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இந்நிலையில் பான் அட்டை செயலிழந்தால் குறிப்பிட்ட சில சேவைகளை பெற முடியாது. வருமான வரித் தாக்கல் செய்ய முடியாது.
பான் எண்ணை மீண்டும் பெறுவது எப்படி?
உங்கள் பான் செயலிழந்தால், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மார்ச் 28, 2023 தேதியிட்ட அறிவிப்பில் கூறுகையில், ஒரு நபர் தனது பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்க என்ன செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ரூ. 1,000 அபராதக் கட்டணம் செலுத்திய பிறகு, வருமான வரித்துறை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின் 30 நாட்கள் கழித்து பான் எண்ணை மீண்டும் செயல்படுத்த முடியும்.
Taxmann.com டி.ஜி.எம் நவீன் வாத்வா கூறுகையில், செயல்படாத பான் காரணமாக சட்டப்பிரிவு 272பி கீழ் ஒரு மதிப்பீட்டு அதிகாரி ரூ. 10,000 அபராதம் விதிக்கவும் முடியும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil