/indian-express-tamil/media/media_files/2025/09/24/whatsapp-live-translate-messages-2025-09-24-14-13-48.jpg)
Message translation for WhatsApp Messenger
வாட்ஸ்அப் தனது பயனர்களின் வசதிக்காக புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் பல பில்லியன் மக்கள் வாட்ஸ்அப்-பைப் பயன்படுத்தி வரும் நிலையில், மொழி மற்றும் கலாசாரத் தடைகளை நீக்கும் நோக்கில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்க்கலாம்!
வாட்ஸ்அப், கடந்த வியாழக்கிழமை அன்று, உடனுக்குடன் செய்திகளை மொழிபெயர்க்கும் (Live Translate) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு பயனர் வேறு மொழியில் வரும் செய்தியை எளிதாக மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த வசதியை உபயோகிக்க, நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிது. உங்களுடைய மொபைலுக்கு வரும் செய்தியை நீண்ட நேரம் அழுத்திப் (Long-press) பிடித்தால், திரையில் தோன்றும் மெனுவில் 'Translate' என்ற புதிய ஆப்ஷன் தெரியும். அதை கிளிக் செய்வதன் மூலம், அந்தச் செய்தி உங்களின் விருப்பமான மொழிக்கு மொழிபெயர்க்கப்படும். மேலும், மொழிபெயர்க்கப்பட்ட செய்திகளைச் சேமித்து வைக்கும் வசதியும் இதில் உண்டு.
இந்த புதிய வசதி தனிப்பட்ட உரையாடல்கள், குரூப் சாட்கள் (Group chats) மற்றும் சேனல் அப்டேட்களிலும் (Channel updates) கிடைக்கும்.
தானியங்கி மொழிபெயர்ப்பு வசதி
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சமாக, ஒரு முழு உரையாடலையும் தானாகவே மொழிபெயர்க்கும் (Automatic translation) வசதி கிடைக்கிறது. இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால், அந்த உரையாடலில் வரும் அனைத்து செய்திகளும் தானாகவே மொழிபெயர்க்கப்பட்டு காண்பிக்கப்படும். உங்கள் உரையாடல்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்கவே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு உங்கள் சாதனத்தில் மட்டுமே நடப்பதால், அது தனிப்பட்டதாகவே இருக்கும்.
இதற்கு முன்பு, ஆகஸ்ட் மாதத்தில், 'Writing Help' என்ற புதிய AI வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் செய்திகளைத் திருத்தவும், மீண்டும் எழுதவும், அல்லது செய்தியின் தொனியை மாற்றவும் உதவுகிறது. ஒருவர் ஒரு செய்தியை அனுப்பும் முன், அதில் உள்ள இலக்கணப் பிழைகளை சரிசெய்யவும், சரியான சொற்றொடர்களைப் பயன்படுத்தவும், தேவைப்பட்டால் செய்தியின் தொனியை மாற்றவும் இந்த வசதி உதவியது. மேலும், தொழில்முறை, நகைச்சுவை, ஊக்கம் தரும் வார்த்தைகள் போன்ற பல்வேறு வகைகளில் AI-உருவாக்கிய பரிந்துரைகளையும் இது வழங்கியது.
தற்போது, இந்த மொழிபெயர்ப்பு அம்சம் குறிப்பிட்ட சில மொழிகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மேலும் பல மொழிகள் சேர்க்கப்படும். தற்போது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, போர்த்துகீசியம், ரஷ்யன் மற்றும் அரபு மொழிகள் கிடைக்கிறது. ஐபோன் பயனர்களுக்கு எதிர்காலத்தில் 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.