முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் தற்போது புதிய வசதி ஒன்றினை தன்னுடைய செயலியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இனி உங்களுடைய நண்பர்கள் பட்டாளத்திடம் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலில் பேசிக் கொள்ளலாம். இந்த வசதி ஐஓஎஸ் (iOS) இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலும் செயல்படும் அனைத்து மொபைல்போன்களிலும் பெற்றுக் கொள்ளலாம். ஐபோன் வாடிக்கையாளர்கள் அடுத்த அப்டேட்டிலும், ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் ஆப் பீட்டா மூலமாகவும் இந்த செயலியின் அப்டேட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ் ஆப் பீட்டா இல்லாத ஆண்ட்ராய்ட் போன் வாடிக்கையாளர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
வாட்ஸ் ஆப் பீட்டா இன்ஃபோ, இந்த க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலினை விண்டோஸ் இயங்குதள வாடிக்கையாளர்களும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் அதற்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கடந்த மே மாதம் முகநூலின் F8 மாநாட்டில் இந்த க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலினைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையினை வெளியிட்டிருந்தது. ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
மிக எளிமையாகவும் சிரமமின்றியும் பயன்படுத்தப்படும் இந்த செயலியின் புதிய வசதியினால் ஒரே நேரத்தில் நான்கு நண்பர்களுடன் பேசலாம்.
உபயோகிக்கும் முறை
வீடியோ காலில் யாருடன் பேச வேண்டுமோ அவருடைய பெயரில் இருந்து தொடங்க வேண்டும். பின்பு 'ஆட் பார்ட்டிசிபெண்ட்’ மூலமாக அடுத்த நபரை வீடியோ காலின் மூலமாக இணைத்துக் கொள்ளலாம். புதிதாக ஒருவர் உரையாடலில் இணையும் போது, ஏற்கனவே உரையாடலில் இருக்கும் நபர்களுக்கு நோட்டிஃபிக்கேஷன் சென்றுவிடும்.
உங்களால் ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே உரையாடலில் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இணைப்பில் வந்த பின்பு தான் நான்காவது நபரை உரையாடலில் இணைத்துக் கொள்ள முடியும்.
உங்களுடைய அலைபேசி திரையில் நான்கு நபர்களின் செயல்பாடுகளும் வீடியோ மூலமாக உங்களுக்குத் தெரியும்.
ஆண்ட்ராய்ட் போன் வாடிக்கையாளர்கள், பீட்டா வாட்ஸ் ஆப் இல்லாத ஆண்ட்ராய்ட் போன்களை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களையும் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மூலமாக இணைத்துக் கொள்ளலாம்.