சமீப காலங்களாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வங்கி கணக்கு டார்கெட்டில் இருந்து ரூட்டை மாற்றிய ஆன்லைன் திருடர்கள், வாட்ஸ்அப் செயலியை குறிவைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப்பில் லாகின் செய்கையில், கூடுதலாக ஒரு பாதுகாப்பு அம்சத்தையும் பயனர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது WABetaInfo வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
Advertisment
இந்தப் புதிய அப்டேட் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு முதலில் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் undo பட்டன் வரவுள்ளதாக அறிவித்த நிலையில், அடுத்ததாக டபுள் வெரிபிகேஷன் அம்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி, நீங்கள் வேறு ஒரு மொபைல்போனில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாக் இன் செய்ய முற்பட்டால், அக்கவுண்ட்-ஐ உறுதிப் படுத்த முதலில் வரும் எஸ்எம்எஸ் அல்லாமல் இனி கூடுதலாக மற்றொரு வெரிபிகேஷனை செய்து முடிக்க வேண்டும்.
இதுகுறித்து WABetaInfo வெளியிட்ட ஸ்கீரின்ஷாட்டில், இந்த நம்பர் ஏற்கனவே வாட்ஸ்அப் கணக்கில் மற்றொரு போனில் உபயோகத்தில் உள்ளது. இந்த கணக்கு உங்கள் கன்ட்ரோலில் தான் இருப்பதை உறுதிசெய்திட, மற்றொரு வெரிபிகேஷன் கோட்-வும் பதிவிட வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக, அடுத்த கோட் அனுப்பிட, டைமர் முடியும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுக்கு ஓடிபி நம்பர் வந்ததும், அதனை பதிவிட்டு லாகின் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.
இந்த அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்படுவதையோ அல்லது ஹேக் செய்யப்படுவதையோ தடுக்க அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மொபைலுக்கு வந்த ஓடிபி நம்பரை தவறான நபர்களுக்கு கூறியதும், அவர்கள் வாட்ஸ்அப் கணக்கை கட்டுக்குள் எடுத்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து, வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த அப்டேட் செயல்பாட்டிற்கு வருகையில், உங்கள் மொபைல் போன் முதலில் வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டதும், சிறிது நேரம் வெயிட் செய்ய வேண்டும். பின்னர், 2 ஆவது ஓடிபி நம்பர் வரும். இந்த ஓடிபி நம்பர் வரும் மெசேஜில், உங்கள் கணக்கு மற்றொரு சாதனத்தில் லாகின் செய்யப்படுகிறது. அது, நீங்கள் இல்லையென்றால், இந்த 6 டிஜிட் எண்ணை ஷேர் செய்ய வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil