சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் பருவமழையின் போது தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக மின்வாரியம் வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது. மின்னகம் கால் சென்டரிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பருவமழையின் போது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தொகை 44 மின்வாரியம் வாரிய அலுவலகங்களுக்கும் பிரிந்து வழங்கப்படும் என்றார். தொடர்ந்து, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு பொறியாளர்கள் முன்னெச்சரிக்கை கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பேரிடர் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தற்போது வரை 169 மின்கம்பங்கள் மற்றும் 70 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றை மாற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 176 கோட்டங்களிலும் 24 மணி நேரமும் மின்சார பணிகளை மேற்கொள்ள 15 பணியாளர்கள் கொண்ட 2 பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 பணியாளர்கள் 2 ஷிப்டு முறையில் பணியாற்றுவார்கள்.
சென்னையில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைந்து ஷிப்ட் முறையில் பணியாற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் டான்ஜெட்கோ-வில் புகார் தெரிவிக்க
மின்னகம்: 94987 94987; சென்னை (வடக்கு): 94458 50900; சென்னை (சென்ட்ரல்) : 94458 50676; சென்னை (மேற்கு): 94458 50400; சென்னை (தெற்கு I): 94448 81912; சென்னை (தெற்கு II): 91505 80252; செங்கல்பட்டு: 94440 99432 மற்றும் காஞ்சிபுரம்: 94443 71912
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“