/indian-express-tamil/media/media_files/2025/09/16/india-91-2025-09-16-18-23-36.jpg)
+91 ஏன் இந்திய எண்ணில் வருகிறது? இதன் பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?
நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம், இந்திய மொபைல் எண்களை அழைக்கும்போது அதன் முன்னால் +91 என்ற எண் வரும். ஆனால், இது ஏன் வருகிறது? இதன் பின்னால் உள்ள காரணம் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகைக்கு 120 கோடி மொபைல் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த சிறிய எண் ஒரு முக்கியமான அடையாளமாக செயல்படுகிறது.
+91 என்பது என்ன?
+91 என்பது இந்தியாவின் சர்வதேச அழைப்புக் குறியீடு (International Calling Code) ஆகும். ஒரு நாட்டின் தொலைபேசி எண்களை சர்வதேச அளவில் அடையாளம் காட்ட இது பயன்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவுக்கு +1 என்றும், பிரிட்டனுக்கு +44 என்றும் குறியீடுகள் உள்ளன. இந்த அழைப்புக் குறியீடுகளை வழங்குவது ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்படும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Tele communication Union - ITU) என்ற அமைப்பு. உலகளாவிய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை இது கட்டுப்படுத்துகிறது.
இந்தியா ஏன் 91-ஐ பயன்படுத்துகிறது?
சர்வதேச அழைப்புகள் சரியான நாட்டைச் சென்றடைவதற்காக, ஐடியு அமைப்பு உலக நாடுகளை 9 மண்டலங்களாகப் (zones) பிரித்துள்ளது. இதில், இந்தியா 9-வது மண்டலத்தில் வருகிறது. இந்த 9-வது மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 14 நாடுகள் உள்ளன. இதன் காரணமாக, இந்தியாவின் தொலைபேசி எண்களுக்கு 91 என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தானுக்கு 92 என்றும், பாகிஸ்தானுக்கு 93 என்றும், இலங்கைக்கு 94 என்றும் அழைப்புக் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சர்வதேச அழைப்புக் குறியீடு, தொலைபேசி எண்களுக்கு ஒரு சர்வதேச முகவரி போல செயல்பட்டு, அழைப்புகள் குழப்பம் இல்லாமல் சரியான நாட்டைச் சென்றடைய உதவுகிறது. இனி, +91-ஐப் பார்க்கும்போது, அது நமது நாட்டின் சர்வதேச அடையாளம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.