வெனிசுலாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரக்காய்போ ஏரி, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தனித்துவமான இயற்கை அதிசயம். இதன் அழகு, வனவிலங்குகள் ஒருபுறம் இருந்தாலும், இங்கு நிகழும் அற்புதமான மின்னல் நிகழ்வுதான் இந்த ஏரிக்கு "பூமியின் மின்னல் தலைநகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
மின்னல் தலைநகரம் எது?
நாசாவின் தரவுகளைப் பயன்படுத்தி அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், மரக்காய்போ ஏரி புதிய மின்னல் தலைநகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஏரியில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஆண்டுக்குச் சராசரியாக 233 மின்னல் வெட்டுகள் ஏற்படுகின்றன. இதற்கு முன் ஆப்பிரிக்காவின் காங்கோ படுகைதான் அதிக மின்னல் தாக்கும் பகுதியாகக் கருதப்பட்டது.
மரக்காய்போ ஏரியில் ஏன் இவ்வளவு மின்னல்?
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் பழமையான ஏரிகளில் ஒன்றான மரக்காய்போ, கரீபியன் கடல் மற்றும் ஆண்டிஸ் மலைத் தொடருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புவியியல் அமைப்பே இங்கு அதிக மின்னல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். ஆண்டிஸ் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், கரீபியனில் இருந்து வரும் ஈரப்பதமான காற்றும் மோதும்போது, தொடர்ச்சியான வெப்பச்சலன சுழற்சி உருவாகிறது. இதனால், வெப்பமான காற்று மேலேறி, குளிர்ந்து, உயரமான மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள்தான் அப்பகுதியில் வழக்கமான மின்னல் புயல்களுக்கு வழிவகுக்கும் மின் செயல்பாட்டிற்கு ஏற்ற வளிமண்டலத்தை உருவாக்குகின்றன.
மரக்காய்போ ஏரியில் நிகழும் தனித்துவமான மின்னல் நிகழ்வு "கடாடும்போ மின்னல்" என்று அழைக்கப்படுகிறது. ஏரியில் கலக்கும் கடாடும் போ ஆறு இந்த மின்னலுக்குப் பெயரானது. ஆற்றின் முகத்துவாரப் பகுதியில்தான் இந்த மின்னல் மிக அடிக்கடி நிகழ்கிறது. கடாடும்போவில் ஏற்படும் மின்னல் புயல்கள் இரவில் வானத்தை ஒளிரச் செய்யும் ஒரு கண்கவர் காட்சியாகும்.
கடாடும்போ மின்னல் புயல்கள் பார்க்க அற்புதமாக இருந்தாலும், அவை சுற்றுச்சூழலில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நேர்மறை: தொடர்ச்சியான மின் செயல்பாடு, வளிமண்டலத்தை அயனியாக்கம் செய்து ஓசோன் உருவாவதற்கு உதவுகிறது. எதிர்மறை: மின்னல் தாக்குதல்கள் தீ ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மரக்காய்போ ஏரியைச் சுற்றியுள்ள வறண்ட புற்கள் இதனால் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது.
அதிக மின்னல் தாக்கும் கண்டம் எது?
ஆய்வின்படி, உலகில் அதிக மின்னல் செயல்பாட்டுப் பகுதிகளில் முதல் 10 இடங்களில் ஆப்பிரிக்கா 6 இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் ஆப்பிரிக்கா அதிக மின்னல் தாக்கும் ஹாட்ஸ்பாட்களைக் கொண்ட கண்டமாக விளங்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை விக்டோரியா ஏரி மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள பிற ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளாகும். இந்த இடங்களும் மரக்காய்போ ஏரிக்கு ஒத்த புவியமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், கண்டங்களில் மின்னல் பொதுவாக பிற்பகலில் உச்சத்தை அடைகிறது என்பதையும், அதிக மின்னல் செயல்பாடு நிலப்பரப்பில்தான் அதிகம் நிகழ்கிறது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.