/indian-express-tamil/media/media_files/2025/03/22/kNcpFiVyawH6YnzUN1th.jpg)
அண்டார்டிகாவில் பெரும் பனிப்பாறை ஒன்று உடைந்துள்ளது. George VI என்ற பனிப்பாறையில் இருந்து ஜனவரி 13-ம் தேதி அன்று A-84 எனும் ராட்சத பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்துள்ளது. இதில், எண்ணிலடங்கா புதிய உயிரினங்கள், ராட்சத கடல் சிலந்திகள், ஆக்டோஃபஸ்,பவளப்பாறைகள் ஆகியன தென்பட்டதாக விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. 510 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறை கொல்கத்தாவை விட சுமார் 2.5 மடங்கு பெரியது.
ரிமோட் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஜனவரி 25 அன்று கடலுக்கு அடியில், பனிப் பாறையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் படம்பிடித்து, மாதிரிகளைச் சேகரித்தது. இந்த கண்டுபிடிப்புகள் அண்டார்டிக் பனிப்பாறைகளுக்கு அடியில் சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது குறித்த தகவல்களை வழங்கும்.
பனிக்கு அடியில் உயிரினங்கள்!
விஞ்ஞானிகள் 8 நாட்கள் பனி சூழ்ந்த கடற்பரப்பை ஆராய்ந்து, 1,300 மீட்டர் ஆழத்தில் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்தனர். ராட்சத பவளப்பாறைகள் மற்றும் கடல் சிலந்திகள், கடற்பாசிகள், பனிமீன்கள், ஆக்டோஃபஸ், ஒரு மீட்டர் அகலம் கொண்ட ஜெல்லிமீன் ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
"இவ்வளவு அழகான, செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடல்வாழ் உயிரினங்களின் அளவை பொறுத்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கூட இவை இருந்திருக்கலாம் என்று போர்ச்சுகல் நாட்டின் பல்கலை. விஞ்ஞானி பாட்ரிசியா தெரிவித்தார்.
ஆச்சரியத்திற்கான காரணம் என்ன?
பனிப்பாறையின் கீழ் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள் குழு ஆச்சரியப்படுவதற்கு, ஆழ்கடலில் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களை சார்ந்து இருப்பதே காரணம். "இருப்பினும், அண்டார்டிக் அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக 150 மீட்டர் தடிமன் கொண்ட பனியால் மூடப்பட்டிருக்கின்றன, மேற்பரப்பு ஊட்டச்சத்துக்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன" என்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) அறிக்கை தெரிவிக்கிறது.
கடல் நீரோட்டங்கள், பனிப்பாறை உருகும் நீர், பனி அடுக்குக்கு அடியில் உயிர்களைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு எரிபொருளாக இருக்கும் துல்லியமான வழிமுறை இன்னும் கண்டறிய வில்லை. 2021-ல் தான் BAS ஆராய்ச்சியாளர்கள் தெற்கு வெட்டல் கடலில் உள்ள ஃபில்ச்னர்-ரோன் பனி அடுக்கின் அடியில் கடல்வாழ் உயிர்களை முதன்முதலில் கண்டுபிடித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.