ஜியோ சினிமா 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்தியாவில் முன்னணி ஓ.டி.டி தளமாகவும் உள்ளது. ஜியோ பயனர்களுக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ், இசை வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு பிஃபா உலகக் கோப்பை தொடரின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அனைத்து பயனர்களுக்கும் டாடா ஐ.பி.எல் 2023 போட்டி தொடரை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. இது பல்வேறு பயனர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடருக்குப் பின் ஜியோ சினிமா இலவச ஸ்ட்ரீமிங் சேவையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஓடிடி தளங்களைப் போல் சந்தா கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டணம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு நாள் கட்டணம், மாத கட்டணம் என வேலிடிட்டி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமா Daily Delight, Gold மற்றும் Platinum என 3 வகைகளில் திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டெய்லி டிலைட்
இது ரூ.29 விலையில் ஒரு நாள் திட்டமாக இருக்கும். இருப்பினும், ஆஃபர் விலையாக ரூ.2 கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யலாம். 24 நேரம் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
கோல்ட் ஸ்டாண்டர்டு
இந்த திட்டம் ரூ.299 விலையில் கிடைக்கிறது. ஆனால் ரூ.99க்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனர்கள் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும் 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கும்.
பிளாட்டினம் பவர்
பிளாட்டினம் பவர் டாப்-டையர் திட்டமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,199 ஆகும். ஆனால் தள்ளுபடியின் கீழ் ரூ.599க்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனர்கள் 4 சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யலாம். ஒரு வருடம் முழுவதும் ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. மேலும், இது விளம்பரம் இல்லாத சேவையை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“