2024 ஆம் ஆண்டுக்கு நாம் விடைக் கொடுக்க தயாராகி வரும் நிலையில், கடந்த ஆண்டு இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு சிலருக்கு இனிமையாகவும், சிலருக்கு துயரமாகவும், சிலருக்கு மற்றுமொரு ஆண்டாகவும் அமைந்திருக்கலாம். இருப்பினும் புதிதாக வரும் 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துவோம்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு இந்திய அளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம். இதில் உள்ள டிசம்பர் 10 வரையிலான தகவல்கள் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் இடம்பெற்றுள்ளது. ஐ.பி.எல் மற்றும் ஐ.பி.எல் மெகா ஏலம் காரணமாக இந்த வார்த்தை அதிகம் தேடப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாம் இடத்திலும் கிரிக்கெட்டே இடம் பிடித்து, இந்தியர்களின் கிரிக்கெட் பற்றை வெளிப்படுத்துகிறது. இரண்டாம் இடத்தில் இரண்டாம் முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட டி20 உலகக் கோப்பை இடம் பெற்றுள்ளது.
மூன்றாம் இடத்தில் பாரதீய ஜனதா கட்சி என்ற பா.ஜ.க வார்த்தை இடம் பெற்றுள்ளது. 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்ததோடு, அடுத்தடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி தொடர்ந்து வருவதால் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெற்றதையடுத்து, 2024 தேர்தல் முடிவுகள் நான்காம் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாம் இடத்தில் உலகமே உற்று நோக்கிய ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக, ஒலிம்பிக்ஸ் 2024 உள்ளது.
6 ஆம் இடத்தில் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய அதீத வெப்பம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்ததால் நாடு முழுவதும் இதுதொடர்பான தேடல்கள் அதிகம் இருந்தது.
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா மறைவை அடுத்து, அவர் தொடர்பான தேடல்கள் அதிகம் இருந்தது. மேலும் டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் பற்றிய ஆர்வம் காரணமாகவும் ரத்தன் டாடா இந்த பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்துள்ளது.
8 ஆம் இடத்தில் இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் இடம்பிடித்தது. மக்களவை தேர்தலில் கணிசமான தொகுதிகளைப் பெற்றாலும், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. தேர்தலுக்கு முன்னர் இந்தியா கூட்டணி மூலம் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டதால், பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
9 ஆம் இடத்தில் மீண்டும் விளையாட்டு துறை வந்துள்ளது. இந்த முறை கபடி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நடந்து வரும் ப்ரோ கபடி லீக் இணையவாசிகளை, அதுகுறித்து அதிகம் தேடச் செய்துள்ளது.
10 ஆவது இடத்தில் விளையாட்டே இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் அதிக தேடல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.