உங்கள் ஜிமெயில் கணக்கு மற்றும் அதுதொடர்புடைய கூகுள் சேவைகளின் பாதுகாப்பிற்காக, கூகுள் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பழைய பாஸ்வோர்ட் மற்றும் two-factor authentication போன்ற முறைகளை மட்டுமே நம்பியிருப்பது உங்கள் அக்கவுண்டை ஆபத்தில் ஆழ்த்தும் என கூகுள் தெரிவித்துள்ளது. கணக்கிற்கான அணுகலை இழக்கும் முன், பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தும்படி பயனர்களை வலியுறுத்துகிறது.
ஏன் இந்த எச்சரிக்கை?
ஒக்டா (Okta) வெளியிட்ட அறிக்கையின்படி, இணையத் தாக்குதல்களின் தன்மை மாறிவிட்டது. ஹேக்கர்கள் இப்போது GenAI (ஜென்ஏஐ) எனும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, உண்மையான உள்நுழைவுப் பக்கங்களைப் போலவே தோற்றமளிக்கும் மிக நம்பகமான ஃபிஷிங் தளங்களை (phishing sites) உருவாக்குகிறார்கள். இந்தக் காரணத்தாலேயே, பாஸ்வோர்டு அப்பால் சென்று புதிய, மேம்பட்ட பாதுகாப்பு முறைகளுக்கு மாறும்படி கூகுள் தனது பயனர்களை வலியுறுத்துகிறது.
பாஸ்கீ (Passkey) என்றால் என்ன? ஏன் அவசியம்?
பாஸ்கீ என்பது உங்கள் கணக்கின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும் புதிய அங்கீகார முறையாகும். இது குறிப்பிட்ட சாதனம் அல்லது சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்நுழைய முயற்சிக்கும்போது, உங்கள் சாதனத்தின் கைரேகை, முக அங்கீகாரம் அல்லது PIN போன்றவற்றை பயன்படுத்தி அங்கீகரிக்கலாம். இதனால், ஹேக்கர்கள் உங்கள் கடவுச்சொல்லைத் திருடினாலும், பாஸ்கீ இல்லாமல் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியாது. தற்போது, பெரும்பாலான ஜிமெயில் பயனர்கள் இன்னும் பாஸ்கீகளைப் பயன்படுத்துவதில்லை. அவர்களின் கூகுள் கணக்குகளுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என கூகுள் எச்சரிக்கிறது.
பாதுகாப்பாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கூகுள் கணக்கில் பாஸ்கீயை முடிந்தவரை விரைவாகச் செயல்படுத்துவது மிகவும் முக்கியம். இது உங்கள் கணக்கின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும். கடவுச்சொல்லை உள்ளிடும் இணையதளங்களின் URL முகவரிகளை எப்போதும் சரிபார்க்கவும். அவசரமாக அல்லது கவனக்குறைவாக பாஸ்வோர்ட் உள்ளிடுவது உங்களை ஃபிஷிங் தாக்குதல்களுக்கு ஆளாக்கலாம். ஜென்ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இணையத் தாக்குதல்களின் தீவிரத்தையும், துல்லியத்தையும் அதிகரிக்கின்றன. எனவே, எப்போதும் விழிப்புடன் இருப்பது உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களும் ஹேக்கர்களின் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் கணக்கின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம்.