/indian-express-tamil/media/media_files/2025/09/29/youtube-premium-lite-2025-09-29-14-28-56.jpg)
'விளம்பரத் தொல்லை இனி இல்லை'... இந்தியர்களுக்கு ரூ.89-ல் 'பிரீமியம் லைட்' திட்டம் அறிமுகம்!
யூடியூப் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்தியப் பயனர்களுக்காகக் குறைந்த விலையில் புதிய மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதுதான் பிரீமியம் லைட் (PremiumLite). இத்திட்டத்தின்கீழ், வீடியோக்களை இனி விளம்பரங்கள் தொல்லையே இல்லாமல் பார்க்கலாம். இதன் மாதச் சந்தா விலை வெறும் ரூ.89 மட்டுமே.
யூடியூப் பிரீமியம் லைட் - என்னென்ன அம்சங்கள் கிடைக்கும்?
முழுமையான பிரீமியம் திட்டத்தைவிட விலை குறைவாக இருப்பதால், இதில் சில அம்சங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது, அதிக அம்சங்கள் தேவையில்லை, ஆனால் விளம்பரங்கள் மட்டும் இருக்கக் கூடாது என நினைக்கும் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் | யூடியூப் பிரீமியம் லைட் (ரூ.89/மாதம்) | யூடியூப் பிரீமியம் |
விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ | பெரும்பாலான வீடியோக்களுக்கு உண்டு | அனைத்து வீடியோக்களுக்கும் உண்டு |
பின்னணி இயக்கம் (Background Play) | இல்லை | உண்டு |
ஆஃப்லைன் டவுன்லோடுகள் | இல்லை | உண்டு |
விளம்பரம் இல்லாத மியூசிக் | இல்லை | உண்டு (யூடியூப் மியூசிக் உடன்) |
இந்த யூடியூப் பிரீமியம் லைட் பிளான் உங்க ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் என அனைத்து சாதனங்களிலும் இயங்கும்.
"பிரீமியம் லைட்" திட்டம் என்பதால், சில விதிவிலக்குகள் உள்ளன. சில குறிப்பிட்ட இடங்களில் இன்னும் விளம்பரங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. இசை சார்ந்த கன்டென்ட் (Music content), ஷார்ட்ஸ் (Shorts), நீங்க ஏதேனும் தேடும்போதோ அல்லது ப்ரௌசிங் செய்யும்போதோ? (Searching or Browsing) விளம்பரங்கள் தோன்றலாம் என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூப்-பின் இந்நடவடிக்கை, தங்கள் பார்வையாளர்களுக்கு "நெகிழ்வான விருப்பங்களை" (Flexible options) வழங்குவதற்காகவே. அதே சமயம், இது கண்டெண்ட் உருவாக்குபவர்களுக்கும் (Creators) கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யும். உலகம் முழுவதும் யூடியூப் மியூசிக் மற்றும் பிரீமியம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 125 மில்லியனைத் தாண்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய குறைந்த விலை திட்டம் படிப்படியாக அனைத்து இந்தியப் பயனர்களுக்கும் அடுத்த சில வாரங்களில் முழுமையாகக் கிடைக்க உள்ளது.
இந்த லைட் திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் $7.99 (சாதாரண பிரீமியம் $13.99) என்ற விலையில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற சந்தைகளிலும் இது பரிசோதிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களைக் கண்டு சலித்துப் போனவர்களுக்கு, முழுப் பணத்தையும் செலுத்தத் தயாராக இல்லாதவர்களுக்கு, இந்த ரூ.89 பிரீமியம் லைட் திட்டம் சரியான தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.