ஸ்ரீதர் வேம்பு தனி ஒருவராக ஸோகோவை ஒரு பெரிய மென்பொருள் சேவை (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். சென்னையைச் சேர்ந்த கிளவுட் சர்வீசஸ் நிறுவனமான ஸோகோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, நீண்ட கால தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருந்த நிலையில், அவர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: Zoho Corp CEO Sridhar Vembu steps down, takes on the role of chief scientist
ஸ்ரீதர் வேம்பு தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்பார், அங்கே அவர் ஸோகோ நிறுவனத்தின் ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார், கிராமப்புற மேம்பாட்டுக்கான அவரது தனிப்பட்ட பணியில் கவனம் செலுத்துவார்.
“இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முக்கிய முன்னேற்றங்கள் உட்பட, நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டு பணியைத் தொடர்வதோடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முழுநேரமும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் ஸோகோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பொறுப்பான தலைமை விஞ்ஞானியாக ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வேன்” என்று ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனி ஒருவராக ஸோகோவை ஒரு பெரிய மென்பொருள்-சேவை (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். ஸோகோவின் கிளவுட் தொகுப்பில் உற்பத்தித்திறன், ஒத்துழைப்பு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பின்-அலுவலக கணக்கியல் ஆகியவற்றிற்கான கருவிகள் உள்ளன. இந்த நிறுவனம் வணிக மென்பொருள் சந்தையில் மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஆரக்கிள் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஸோகோ அதன் 55+ வணிக பயன்பாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,00,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
1989-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 2005-ம் ஆண்டு ஸோகோவை நிறுவுவதற்கு முன்பு, அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள குவால்காமில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2024-ம் ஆண்டில் இந்தியாவின் 39வது பணக்காரராக ஸ்ரீதர் வேம்புவை மதிப்பிட்டது, அவரது நிகர மதிப்பு $5.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.