/indian-express-tamil/media/media_files/2025/09/28/zoho-arattai-messaging-app-2025-09-28-13-04-38.jpg)
இனி ஆமை வேக இன்டர்நெட்டிலும் மெசேஜ் பறக்கும்... சோஹோவின் 'அரட்டை' ஆஃப்; வாட்ஸ்அப்-பிற்கு போட்டியாகுமா?
இனி உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையாக இருந்தாலும் சரி, இன்டர்நெட் இணைப்பு ஆமை வேகத்தில் இருந்தாலும் சரி... மெசேஜ் அனுப்ப முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். ஆம், மெசேஜ் அனுப்பும் செயலிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அரட்டை (Arattai) என்ற பெயரில் புதிய மெசேஜிங் செயலியை சோஹோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான பிரபலமான மெசேஜிங் செயலிகள் இயங்க அதிக திறன் கொண்ட போன்களும், வேகமான இன்டர்நெட் இணைப்பும் தேவைப்படுகின்றன. ஆனால், சோஹோவின் ‘அரட்டை’ செயலியின் தனிச்சிறப்பே இதுதான். விலை குறைந்த, அடிப்படை ஸ்மார்ட்போன்களில் கூட இந்தச் செயலி மிகத் தடையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் இணைப்பு பலவீனமாகவோ அல்லது விட்டு விட்டுக் கிடைத்தாலும், மிகக் குறைந்த டேட்டாவைப் பயன்படுத்தியே இது தொடர்ந்து இயங்கும்.
சோஹோ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, “தொழில்நுட்பம் அனைவருக்கும் சொந்தமானது. நம்மிடம் இருக்கும் போனின் விலை என்ன, இன்டர்நெட் வேகம் என்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், நவீன தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு,” என்கிறார். அரட்டை செயலியின் நோக்கம், டிஜிட்டல் வசதிகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நம்பகமான தகவல் தொடர்பு வசதியை வழங்குவதே ஆகும்.
அதிக டேட்டாவைக் கேட்கும் தேவையற்ற அம்சங்கள் இந்தச் செயலியில் குறைக்கப்பட்டிருப்பதால், குறைந்த ரேம் கொண்ட போன்களிலும் இது மிகச் சுலபமாகச் செயல்படுகிறது. எடை குறைந்த செயலியாக இருந்தாலும், இது மெசேஜ்களை மிக வேகமாக லோட் செய்து (loading times) தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்கிறது.
இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறிய நகரப் பகுதிகளில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும், வரையறுக்கப்பட்ட இன்டர்நெட் இணைப்பையுமே கோடிக்கணக்கான மக்கள் நம்பியுள்ளனர். வாட்ஸ்அப் போன்ற ஆஃப் செயல்பட அதிக டேட்டா தேவைப்படும்போது, இந்தச் செயலி மக்களுக்கு மாற்று வழியை வழங்குகிறது.
அரட்டை செயலிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், தற்போது வரை இதில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption) என்ற பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்படவில்லை. இந்த அம்சம் சேர்க்கப்பட்டால், வாட்ஸ்அப்பிற்கு முழுமையாகப் போட்டியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.