Advertisment

ஆறு மாதத்தில் பெரிய தலைகள் பா.ஜ.க-வில் இருந்து செல்ல வாய்ப்பு - அண்ணாமலை பேட்டி

ஆறு மாத காலத்தில் பெரிய தலைகள் கட்சியில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Corruption complaint against Minister Sivashankar

அண்ணாமலை

ஆறு மாத காலத்தில் பெரிய தலைகள் கட்சியில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை சிட்ரா கலையரங்கில் சாதனை மகளிர் சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், உங்களால் தான் நாங்கள் இருக்கின்றோம் இந்த நாடு இருக்கிறது. என்னுடைய பேருக்கு பிறகு எம்.பி, எம்.எல்.ஏ எனக்கு ஓடுவதற்காக நான் இங்கு வரவில்லை பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்கான முயற்சி தான் தன்னிடம் உள்ளது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பா.ஜ.க வளரக் கூடாது. அவ்வாறு வளர்ந்தாலும்கூட அது தொடர்ந்திருக்க கூடிய வளர்ச்சியாக இருக்காது. பாஜக தமிழகத்தில் தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தமிழக மக்களின் அன்பை பெற்று அது வளர வேண்டும்.
நான் நேற்று மதுரை சென்னை இடங்களில் என்னுடைய கருத்தாக, என்ன பேசி இருக்கின்றேனோ அது தான் என்னுடைய கருத்து அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது கீழும் கிடையாது. அதேபோல், என்னைப் பற்றி சிலர் ஏதாவது கூறினால், அந்த கருத்து என்னுடைய கருத்தை பாதிக்காது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் அவர்களுடைய கருத்தில் உறுதியாக இருக்கட்டும். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. வேறு வேறு கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒரு வளர்ந்த கட்சியில் இணைந்து தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க தொண்டன் அவ்வாறு இல்லை. யாரும் போகாத பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுடைய பாதை தனியாகத்தான் இருக்கும். எனவே இதை யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

பாஜக அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள், கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிடாதீர்கள். ஆளும் கட்சியுடன் ஒப்பிடாதீர்கள். பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் அந்த கட்சி வளர்ந்த பிறகு தான் அதில் இணைந்துள்ளார்கள். ஆனால், பாஜக தொண்டர்கள் அவ்வாறு இல்லை எப்பொழுது பாதுகாக்க ஆட்சிக்கு வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் இருக்கக்கூடிய தலைவர்கள் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுடன் ஒப்பிட்டால் அது சரியான ஒப்பிடல் இல்லை. அதேபோல், மற்றொரு கட்சித் தலைவர்கள் ஒப்பிட்டாலும் அதுவும் சரியான ஒப்பிடல் இல்லை. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் இதற்கு மாற மாட்டேன். நான் இவ்வாறு தான் இருப்பேன். என்னுடைய தலைமையில் கட்சி இவ்வாறு தான் இருக்கும். அப்போது இந்தக் கட்சியில் பல்வேறு விஷயங்கள் மாற்றங்கள் செய்யப்படத்தான் வேண்டும்.

ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை முன்னெடுக்க தான் வேண்டும். ரத்தம் வரத்தான் செய்யும். அவ சொற்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், அவமானங்களை சந்தித்து தான் ஆக வேண்டும், அனைவரின் விமர்சனங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் வளர்ந்த விதம் வேறு பா.ஜ.க வளர்ந்து வரும் விதம் வேறு. நான் நேற்று கூறியது, அரசியல் கட்சியில் சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் ஒரு முடிவை எடுக்கும் பொழுது துணிந்து எடுக்க வேண்டும். அதில் தவறு நடந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போன பிறகும், துணிந்து நின்று வென்றார்கள். ஒரு தலைவர் என்பவர் இவ்வாறு தான் நிற்பார்கள், நானும் அப்படிப்பட்ட பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். பாரதிய ஜனதா கட்சியின் காலம் வந்து விட்டதாக கருதுகிறேன், மக்கள் அதற்காக தயாராக இருப்பதாக நான் பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரை எனது தாயார் ஜெயலலிதா அம்மையாரைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். என்னுடைய மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவர்கள். பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியின் மகிமை என்னவென்றால் நாங்கள் அனைவரும் எங்களது சொந்த கருத்துக்களை பேசுகிறோம். அண்ணாமலை சொல்வதற்காக அ.தி.மு.க கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல், அ.தி.மு.க சொல்வதற்காக பா.ஜ.க எதிர் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாரும் இங்கு யாருக்கும் சாமரம் வீசுவதில்லை.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராகுல் காந்தியைவிட ஸ்டாலின் சிறந்தவர் என கூறுவது போன்றெல்லாம் நாங்கள் கூற மாட்டோம். 2024ம் ஆண்டுக்கான தேர்தல் மோடிக்கான தேர்தல். பத்தாண்டுகள் அவர் ஆட்சி செய்து விட்டார் இன்னும் ஐந்து ஆண்டுகால வேண்டுமா, பத்து ஆண்டுகாலம் அவர் செய்ததற்கான சான்றுகளை வழங்க வேண்டியது எங்களுடைய கடமை.

தமிழ்நாட்டில் அவதூறு நோட்டீஸ் போடாமல் அரசியல் செய்கின்ற ஒரே ஆள் நான்தான். என்னைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு எழுதினாலும் சரி, அது குறித்து அவதூறு நோட்டிஸ் நான் தரமாட்டேன். அதை மக்கள் மன்றத்தில் விட்டுவிட வேண்டும்.” என்று கூறினார்.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் நிலை குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், “ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது என நான் ஆளுநரை சந்தித்தபோது கூறினேன். ஆளுநரை பொருத்தவரை அவர் என்ன கூறி இருக்கலாம் என்றால் ஆன்லைன் ரம்மி தடை ஒப்புதல் என்பது ஒரு பில் ஃபால்டி, மீண்டும் அந்த பில்லை சரி செய்து தரக்கூடிய ஒரு வாய்ப்பு, ஈகோ அடிப்படையில் அந்த பில்லுக்கு கையெழுத்திட வேண்டுமென்றால் ஆளுநர் கையெழுத்திட்டு தான் ஆக வேண்டும். அது அரசியலமைப்புச் சட்டம். ஆனால், இதே சட்டத்தை ஆளுநர் கையெழுத்திட்டால் அது உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் தான் நிறுத்தி வைக்கப்பட போகிறது. யாரோ ஒருவருக்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட வேண்டும் என நிர்பந்திக்க கூடாது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் ஆராய்ந்து அந்த சட்டத்தை சரி செய்ய வேண்டும். அதேபோல், ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை அப்படியே மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.” என்று கூறினார்.

அமைச்சர் பொன்முடி ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க என பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவர் பொன்முடி அவ்வாறு பேசுவது ஒன்றும் புதிதல்ல எனவும் மக்களுக்கு அது கேட்டு கேட்டு பழக்கம் ஆகிவிட்டது. முதலமைச்சர் அதற்கு ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை. இதனை மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் விட்டுவிடலாம். கட்சியில் இணைவது போவது எல்லாம் சகஜம். பா.ஜ.க-வில் இரண்டாம் மூன்றாம் நான்காம் கட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் செல்வது பெரிய செய்தியாக வருகிறது என்றால் உண்மையாகவே பா.ஜ.க-வை சீரியசாக எடுத்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். தற்போது தி.மு.க-வில் இருக்கக்கூடிய பாதை அமைச்சர்கள் அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்கள். நான் கூறிக் கொள்வது எல்லாம் அனைவரும் நன்றாக இருங்கள். போகின்ற இடத்தில் விசுவாசமாக இருங்கள். அரசியலில் என்ன சாதிக்க விரும்பினீர்களோ அதனை அந்த கட்சியில் இருந்து சாதியுங்கள். மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.

பா.ஜ.க-வின் ஐடி விங் என்பது உணர்வுபூர்வமாக செயல்படக்கூடிய ஒன்று. உங்களுக்கு ஒரு ரகசியத்தை கூறுகிறேன். பா.ஜ.க-வில் தொண்டனாக இல்லாத ஒருவர்தான் பாதி ஜிடி விங் வேலையை செய்வார். உறுப்பினர் அட்டை இல்லாதவர் தான் நல்ல நாடு அமைய வேண்டும் என அதனை செய்து கொண்டே இருப்பார். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சி என்பது அப்படி தான் இருக்கும். நான்கு பேர் வருவார்கள் நான்கு பேரும் செல்வார்கள் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு அகில இந்திய கட்சிக்கு பெரிய ஆளு சேர்ப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. அதனால், தமிழகத்திற்கு என்ன நடக்க வேண்டும் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதனை நடத்தி காட்ட வேண்டும் என்றால் அதற்கும் தயாராக இருக்கின்றோம்.

ஊழல் செய்தல் அமலாக்கத்துறை வருகிறது, காங்கிரஸ் கட்சியினர் ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது சரி என கூறுகிறார்கள். அதே சமயம், முதலமைச்சர் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை தவறான பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். எனவே, முதலில் இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் கே.எஸ். அழகிரி அமைப்பினர் ஆம் ஆத்மி கரப்ட் பாஜக நடவடிக்கை சரி என கூறுகிறார்கள். ஆனால், கூட்டணியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் தவறு எனக் கூறுகிறார். எனவே, அவர்கள் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது எங்களை பொறுத்தவரை ஊழல்வாதிகளை அரசு சார்ந்த ஏஜென்சிஸ் நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment