தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகின்றன, இருப்பினும் மாநிலத்தில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 30,000க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் செவ்வாயன்று புதிதாக 30,055 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 2.11 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது.
தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.2 முதல் 1.3% வரை உள்ளது, ஆனால் தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 5 ஆம் தேதி, ஒரு நாளைக்கு சராசரியாக 8 இறப்புகளைப் பதிவு செய்து கொண்டிருந்த மாநிலத்தில் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாய்கிழமை, இது 39 ஆக அதிகரித்தது. இறந்த 45 பேர் இணை நோய்களைக் கொண்டிருந்தனர்.
இறந்த 48 பேரில் குறைந்தது 31 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும் எட்டு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். "பல சந்தர்ப்பங்களில், கொரோனா ஒரு தற்செயலான கண்டுபிடிப்பாக உள்ளது. வேறு சில புகார்களுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளும், வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்கிறார்கள்," என்று சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
அறிகுறி இல்லாமல் வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளை, பரிசோதிக்க வேண்டாம் என்று அரசு’ மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
48 இறப்புகளில் கிட்டத்தட்ட 21 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளது. மதுரையிலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கோவை மற்றும் சேலத்தில் தலா இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 11 மாவட்டங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.
செயலில் உள்ள 2.11 லட்சம் நோயாளிகளில், 10,088 (5%) பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து படுக்கைகளிலும் கிட்டத்தட்ட 13% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஐசியுவில் 1133 நோயாளிகள், ஆக்ஸிஜன் படுக்கையில் 4,842 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"அனைத்து வகைகளிலும் 80% க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன. நாம் தொற்றுநோயின் உச்சத்தில் இருக்கிறோம், படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லது மருந்துகள் பற்றாக்குறை இல்லை" என்று சுகாதார செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் கூறினார்.
செவ்வாய்கிழமை, ஐந்து மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. திருநெல்வேலி (662) மயிலாடுதுறை (185), திருவண்ணாமலை (629), ஈரோடு (1,229) மற்றும் பெரம்பலூர் (108) ஆகிய நான்கு மாவட்டங்களில் திங்கள் கிழமை ஒப்பிடுகையில் செவ்வாயில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இலங்கையைச் சேர்ந்த இருவர், நார்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகிய நான்கு சர்வதேச பயணிகள் - வைரஸ் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “