ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆனவர்களில் முருகன், சாந்தன் ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மேற்கண்ட நால்வரும் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், முகமில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாத நிலையிலும், வாக்கிங் செல்ல நினைத்தாலும் முடியாத நிலையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இன்று உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இந்த நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட முருகனின் மனைவி நளினி இன்று சிறப்பு முகாமில் தங்கியுள்ள தனது கணவரை பார்வையிட வருகை தந்தார்.
அதேநேரம், சிறப்பு முகாமில் பல்வேறு சர்ச்சைகள் என சமூக ஊடகங்களில் எழுந்த தகவலை அடுத்து, சிறப்பு முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வருகை தந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய நளினி, ‘தனது மகள் லண்டனில் வசித்து வருவதாகவும், எனது கணவர் முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு மாவட்ட ஆட்சியர், உங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மனுவாக தரும்படி கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; சிறப்பு முகாமில் உள்ள நால்வருக்கும் அவர்களுக்கு தேவையான நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளியான தகவல் உண்மையில்லை.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு மத்திய சிறையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலோ, பெயில் வாங்கினாலோ சொந்த நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
குடும்ப உறவுகளோ, உறவினர்களோ சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற்று தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கலாம்.
மொபைல் போன் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்துக் கொள்ள இங்கு தங்கி இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது விடுதலையாகி, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் அந்த நாட்டினர் தானா என்பதை உறுதி செய்து எங்களுக்கு தகவல் அனுப்பிய பின் இன்னும் பத்து நாட்களில், அவர்களை அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதலை செய்யப்பட்ட நால்வரில ஒருவர் மட்டுமே சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய சிறை வாசலில் பேசிய நளினி, இங்கே எல்லோரும் நல்லா இருக்காங்க, கணவரை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
மத்திய மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோளை விடுகிறேன் அவர்கள் பல காலங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்து விட்டனர்.
தற்போது அவரவர் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று சிறை வாசலில் நளினி தெரிவித்தார்.
செய்தியாளர் க சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil