மறைந்த தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழா தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அன்பழகன் புகைப்படக் கண்காட்சியில், அவருடைய இரண்டாவது மனைவியின் படம் இடம்பெறவில்லை என்று அவருடைய பேத்தி கயல்விழி தெரிவித்துள்ளார்.
Advertisment
மறைந்த தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழா தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை டி.பி.ஐ-யில் நூற்றாண்டு வளைவைத் திறந்து வைத்தார். மேலும், தி.மு.க சார்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க சார்பில், அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு குறிப்பிடுகையில், “இனமானப் பேராசிரியரின் வாழ்வும் தொண்டும் கொண்டாடப்படவும் இளந்தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படவும் தொடர் விழாக்களை நடத்துகிறோம்.
அதன் ஒருபகுதியாக, புகைப்படக் கலைஞர் கோவை சுப்பு ஏற்பாடு செய்துள்ள 3 நாள் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேராசிரியர் க. அன்பழகன் புகைப்படக் கண்காட்சியில், இரண்டாவது மனைவியின் படம் இடம் பெறாததை ஏற்க முடியவில்லை' என அவரது பேத்தி கயல்விழி கூறியுள்ளார்.
கயல்விழி தனது முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: என் தாத்தா அன்பழகனின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க அலுவலகமான அறிவாலயத்தில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. நானும், என் அக்கா கனிமொழியும் கண்காட்சியை காண சென்றோம். எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால், ஒரு வருத்தம் மேலோங்கி இருக்கிறது.
காரணம், 60 ஆண்டுகளுக்கு மேல், அவருக்கு மனைவியாக வாழ்ந்த, என் பாட்டி மருத்துவர் சாந்தகுமாரியின் படம் ஒன்று கூட அங்கு இல்லை. முதல் மனைவி இறந்த பின், என் பாட்டியை மணந்தார். இருவரும், 60 ஆண்டுகளுக்கு மேல் இணை பிரியா தம்பதியாக வாழ்ந்தனர். அவரை புறக்கணிக்க என்ன அவசியம்? என் பாட்டி, அவரது இரண்டாவது மனைவி என்பதாலா?
அவர்களின் வாரிசுகளாகிய நாங்கள், கட்சியில் எந்த பதவிக்கும் பங்கு கேட்கவில்லை; தேவையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"