ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடைசிக் காலங்களில் பண உதவி தேவைப்படும். அவர்களுக்காகவே பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. அதில், நிலையான வருமான முதலீட்டு திட்டமாக இருப்பது தான் தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) .
இந்த திட்டத்தின் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போது முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது.
60 வயதைத் தாண்டிய எந்தவொரு நபரும் இந்த சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். அதேபோல, 55 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டத்தின் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.1,000 ஆகும். அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இத்திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 7.4% விழுக்காடு வட்டியை கணக்கிட்டால் ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு ரூ.14 லட்சத்து 28 ஆயிரத்து 954 கிடைக்கிறது. வட்டியாக மட்டுமே 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையில் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள் பணத்தை ரொக்கமாக செலுத்தலாம். இந்த முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இருப்பினும், முதிர்வு காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க முடியும்.
இந்த முதியோர் சேமிப்புத் திட்டத்தில் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் சலுகை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil