கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை சென்னையில் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம், சீரகம் கிலோவிற்கு ரூ.200- 250 வரை விற்கப்பட்டது, இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது. பூண்டு கிலோவுக்கு ரூ.100 என்று விற்கப்பட்டது, ஆனால் இன்று ரூ.190- 250 வரை விற்கப்படுகிறது.
மிளகு கிலோவுக்கு ரூ.400 என்று விற்கப்பட்டது தற்போது ரூ.540 என்று விற்கப்படுகிறது. சோம்பு கிலோவுக்கு ரூ.190 என்று விற்கப்பட்டது தற்போது ரூ.360 க்கு விற்கப்படுகிறது. மேலும் புளி ரூ.110க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.175க்கு விற்கப்படுகிறது.
நல்லெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.300 விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.440க்கு விற்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அரிசி, மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் வற்றல் உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மளிகை பொருட்கள் பெரும்பாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது, மேலும் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் தமிழகத்தில் விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது என்றும், தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், கேஸ், மின்கட்டணம், காய்கறி, மளிகைப் பொருட்கள் என அடுத்தடுத்து விலை உயர்வு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil