நடிகர் விவேக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது, தமிழ் திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில், இன்று அதிகாலை விவேக்கின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக்குடன் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்தவரும், சமகால திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பனுமான வைகைப்புயல் வடிவேலு, கண்ணீர் மல்க தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
‘என்னுடைய நண்பன் விவேக்கு, மாரடைப்பால இறந்துட்டானு செய்தியில பாத்தேன்’ என பேசத் தொடங்கிய வடிவேலுவின் கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதிலிருந்தே அவர்களின் நட்பின் பிரிவை நாம் உணர முடியும். பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்ததை நினைவுக் கூர்ந்த வடிவேலு, விவேக்கின் மறைவுச் செய்தி துக்கம் தொண்டைய அடைக்கச் செய்வதாக இருக்கிறது , என்றார்.
பொதுவுடைமைச் சிந்தனை அதிகம் கொண்ட விவேக், அப்துல் கலாமுடன் நெருங்கி பழகி வந்தவர். மரம் நடுவது, விழிப்புணர்வு பிரசாரம் என ஈடுபட்டு வந்தவர் விவேக். ‘என்னடா வடிவேலு, என்னடா விவேக்’னு உரிமையோட பேசிக்குவோம். ‘விவேக்க மாதிரி ஓபன்னா பேச யாரும் இல்ல’ எனும் வடிவேலுவின் வார்த்தைகள் விவேக்கின் பிரிவில் நம்மை மூழ்கிடச் செய்கிறது.
இந்நிலையில், விவேக்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“