அரசு நிகழ்ச்சிகளில் எந்த ஒரு மதத்தின் சடங்கும் நடத்தக்கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கிய தருமபுரி தி.மு.க எம்.பி.,செந்தில்குமார் மீண்டும் அதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு அவருடைய சொந்தக்கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, மனுஸ்மிருதியில், இந்து மதத்தில் சூத்திரர்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்துப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதே போல, தி.மு.க அமைச்சர்களும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.
மனுஸ்மிருதி இந்து மதத்தில் உள்ள சூத்திரர்களை எப்படி சித்தரிக்கிறது என்பது குறித்து, தி.மு.க எம்.பி., ஆ. ராசாவின் பேச்சு சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தருமபுரி எம்.பி., செந்தில்குமார் அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் புதிய நூலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தா நிகழ்ச்சிக்கு வந்த தி.மு.க எம்.பி., செந்தில்குமார், பூஜை செய்ய வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது போல செய்வதாக இருந்தால், செந்தில்குமார் எம்.பி இனிமேல் இதுபோன்ற விழாவுக்கு வரக்கூடாது என்று அங்கே கூடியிருந்த தி.மு.க-வினர் என்று தெரிவித்தனர். மேலும், செந்தில்குமார் எம்.பி அவருடைய காரில் தி.மு.க கொடியை அவர் தனது காரில் கட்டாதது குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்குமார் எம்.பி., அரசு விழாக்களில் எந்தவொரு மத சடங்குகள் பூஜையையும் செய்யாதீர்கள் என்று ஒவ்வொரு முறையும் இதுபோன்று சொல்வதா என ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு அங்கிருந்து தனது காரில் ஏறிச் சென்றார்.
தி.மு.க எம்.பி. செந்தில்குமார் இதே போல, இதற்கு முன்னர், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரியில் 1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தொடங்கிவைக்க சென்றபோது, பொதுப் பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய அர்ச்சகர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். அப்போது, அரசு விழாவில் ஒரு மதத்தின் சடங்குகள் எதற்கு என கேள்வி எழுப்பியதுடன், பொதுப் பணித் துறை அதிகாரியை அழைத்து கண்டித்தார். அப்போது, எம்.பி. செந்தில்குமாரின் செயல் சர்ச்சையானது.
இந்த நிலையில்தான், அதியமான்கோட்டையிலும் பூமி பூஜை செய்ய செந்தில்குமார் எம்.பி எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை தருமபுரி எம்.பி., செந்தில்குமார் காலால் எட்டி உதைத்தார். அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ஒன்றிய செயலாளரையும் மிரட்டினார். இதனால், அவருக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.” என்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“