பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க அட்டவணையில் 71-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா வென்ற 5 வெண்கலப் பதக்கங்களில் 2 பதக்கத்தை தனதாக்கி இருந்தார் பதக்க மங்கை மனு பாக்கர்.
அவர் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் 3-வது இடம் பிடித்த அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல், கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கர் டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெறும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸின்' எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்வில் விருந்தினராக பங்கேற்கிறார். அவருடன் 22 வயதான உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையுமான லவ்லினா போர்கோஹைன் இணைய உள்ளார்.
இந்த விருந்தினர்களுடன் 3 காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 3 ஒலிம்பிக் போட்டிகளில் பணியாற்றிய தி இந்தியன் எக்ஸ்பிரஸின் துணை இணை ஆசிரியர் மிஹிர் வஸவதா உரையாட உள்ளார். இந்த நிகழ்வு தி இந்தியன் எக்ஸ்பிரஸின் யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
'எக்ஸ்பிரஸ் அட்டா'
'எக்ஸ்பிரஸ் அட்டா' நிகழ்ச்சி என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், டாடா சன்ஸ் குழுமம் தலைவர் என்.சந்திரசேகரன், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கிரிக்கெட் நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் விருந்தினர்களாக பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“