திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட திருப்பாவை, மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதில் இருந்தே அதன் சிறப்பை அறியலாம்.
திருப்பாவை தமிழில் பாடப்பட்டிருந்தாலும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுவதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் அமுதமாம் திருப்பாவையை பாடலையும் அது குறித்த விளக்கங்களையும் தினமும் ஒன்றாக தருகிறார், பெருமாள் மணி.