'சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும், வயது ஒரு மேட்டரே அல்ல' என்பதை நிரூபித்துள்ளார் 102 வயது மூதாட்டி ஐரின் ஓ'ஷே (Irene O'Shea). ஆஸ்திரேலியாவின் அடிலைடைச் சேர்ந்த இந்த மூதாட்டி, 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை புரிந்துள்ளார். மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால், சாதனை நோக்கத்தில் இதை அவர் செய்யவில்லை.
Advertisment
ஐரினின் 67 வயது மகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு, Motor Neurone எனும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்தே, இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐரின் இந்த சாகசத்தை செய்து வருகிறாராம்.
ஐரின், தனது 100-வது பிறந்தநாளில் முதன் முதலாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதையடுத்து, தற்போது மூன்றாவது முறையாக விண்ணில் இருந்து குதித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என 50 பேர் முன்னிலையில் இதைச் செய்துள்ளார்.
இதுகுறித்து ஐரின் கூறுகையில், “ எனது மகளின் இழப்பு என்னை வாட்டுகிறது. ஒரு கடுமையான நோயால் அவள் 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டாள். அடுத்த வருடமும் நான் ஸ்கை டைவிங் செய்வேன். இன்னும் நீண்ட நாள் நான் உயிரோடு இருந்தால் என்னுடைய 105 வயதிலும் விண்ணில் இருந்து குதிப்பேன். ஸ்கை டைவைச் செய்யும்போது எப்போதும் போலத்தான் இருந்தேன். கடந்த முறை எப்படி இருந்தேனோ அதே உணர்வுதான் இப்போதும் இருந்தது” என்றார்.
Motor Neurone Disease Association of South Australia என்ற மையத்துக்கு நிதிதிரட்டுவதற்காக அவர் இந்த ஸ்கை டைவிங்கை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் 12,000 டாலர் நிதி திரட்டியுள்ளார். தன்னுடைய அடுத்தடுத்த முயற்சிகள்மூலம் மேலும் நிதிதிரட்ட முடியும் என நம்புகிறார். ஐரினுக்கு 5 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
வெல்லிங்டனில் உள்ள ஸ்கை டைவிங் மையத்தின் மூலம், Jed Smith எனும் பயிற்சியாளர் உதவியுடன் ஐரின் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.