அனைவரும் மனிதச் சங்கிலி பார்த்திருப்போம். ஆனால், தாடி சங்கில் பார்த்திருக்கிறீர்களா? தாடி சங்கிலி என்பதே புதியதாக இருக்கிறதா? 69 தாடி வைத்த ஆண்கள் சேர்ந்து உலகின் மிக நீளமான தாடி சங்கிலியை உருவாக்கி சாதனை படைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தாடி வைத்த 69 பேர் கொண்ட குழு வட்டமாக நிற்பதை கற்பனை செய்து பாருங்கள். அமெரிக்காவின் வயோமிங்கில், கேஸ்பர் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இந்த வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக நீளமான தாடி சங்கிலி’ என்ற கின்னஸ் உலக சாதனை படைக்க தாடி வைத்த ஆண்கள் தங்களின் தாடியை ஒருவரோடு ஒருவர் தாடியை இணைத்து கட்டிக்கொண்டனர்.
2022 தேசிய தாடி மற்றும் மீசை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து மீசை தாடி வளர்க்கும் ஆர்வலர்கள் காஸ்பருக்கு வந்தனர். பப்பில் கொண்டாடவும் ஓய்வெடுக்கவும் வந்த மீசை மற்றும் தாடி வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள், சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு ஒரு இரவு முன்னதாக, இந்த போட்டியாளர்கள் உலகின் மிக நீளமான தாடி சங்கிலியை உருவாக்கினர்.
ஒவ்வொரு நபரும் தங்கள் தாடியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஹேர் கிளிப்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு அருகில் நிற்கும் நபரின் தாடியுடன் இணைத்தனர். அவர்களின் தாடி சங்கிலி 45.99 மீ (150 அடி 10.75 அங்குலம்) அளவு இருந்தது. இந்த நீளம் 2007-ல் ஜெர்மன் தாடிக்காரர்கள் உருவாக்கிய 19.05 மீ (62 அடி 6 அங்குலம்) மிகப் பெரிய தாடி சங்கிலி என்ற முந்தைய சாதனையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
உலக தாடி மற்றும் மீசை சங்கத்தின் தலைவரும், அமெரிக்க தாடிக் குழுவின் கிரியேட்டிவ் இயக்குநர் பிரையன் நெல்சன் கின்னஸ் உலக சாதனையிடம் கூறினார். அப்போது, அவர்களின் சாதனை முயற்சியைப் பற்றி பேசுகையில், “ஆரம்பத்தில் நினைத்ததை விட அனைவரையும் வரிசையில் நிறுத்துவது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பங்கேற்பாளர்களைப் பெற்றோம், மேலும் அவர்களில் சிலருக்கு மிகப் பெரிய தாடிகள் இருந்ததால், எங்களது அசல் இடைவெளித் திட்டங்கள் பொருத்தமற்றதாகிவிட்டன.” என்று கூறினார்.
60-க்கும் மேற்பட்ட தாடி மற்றும் மீசை வைத்தவர்கள், தாடியுடன் ஒன்றாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகளின் எதிர்வினைகளைப் பார்ப்பது அவர்களுடைய முயற்சியின் சிறந்த பகுதி என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“