நடிகர் ஜெய் சாலை விதிகளை மீறி செயல்பட்டதால் மீண்டும் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். ஆனால் இம்முறை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் சர்ச்சையில் நடிகர், நடிகைகள் அதிகம் உண்டு. ஆனால் அடிக்கடி போலீசிடம் சிக்கும் நடிகர் யார்? என்றால் அது நடிகர் ஜெய்யை சொல்லலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிற்பிக்கப்பட்டது. அதன் பின்பு 5 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு அவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது என ஜெய்யை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள்.
சில காலம் அமைதியாக இருந்த ஜெய் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஆனால் இம்முறை அவருக்கு கிடைத்த தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நல்ல நோக்கத்துடனும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம், நடிகர் ஜெய் நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் தனது சொகுசு காரில் பயணித்தார். காரை ஓட்டியது அவரது டிரைவர். அப்போது ஜெய்யின் காரின் சைலன்ஸரில் அதிகப்படியான சத்தம் வந்துள்ளது. இது சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று போக்குவரத்து காவலர்கள் அவரின் காரை மடக்கினர்.
காரில் இருந்து வெளியில் வந்த ஜெய்யிடம் அதிகப்படியான சத்தம் ஏற்படுத்துவது தவறு என்றும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறுதல் ஏற்படும் என்று தெரிவித்தனர். தவறை உணர்ந்துக் கொண்ட ஜெய்யிடம் காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத டிராபிக் போலீசார் பதிலுக்கு ஜெய்யையே வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்தனர்.
அந்த வீடியோவில் ஜெய் ” இது என்னுடைய கார் தான். இதிலிருந்து அதிக சத்தம் வெளிவருகிறது. இப்படி அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்தினால் முதலில் அதை போலீஸார் பறிமுதல் செய்வார்கள். அதனால் யாரும் ஒலி எழுப்பும் காரை பயன்படுத்த வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ” என்று கூறியுள்ளார். ஜெய்யின் அட்வைசை வீடியோவாக எடுத்து அதை போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு வீடியோவாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.