பிகில் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் மேடையில் விவேக் மரம் நடுவது குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அப்போது, பேசிய அவர், பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர் மீது நமக்கு கோபம் வரும். ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது. அவர் மரம் நடும் விஷயத்தை பற்றி நான் கூறுகின்றேன். ரொம்ப பெரிய விஷயம் ஒரு நகைச்சுவை நடிகனாக சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, செயலிலும் இறங்கி, செயல்படவும் வைத்து விட்டார் சூப்பர் என நடிகர் விவேக்கை பாராட்டினார். விஜயுடன் குஷி, திருமலை. ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் விவேக் நடித்துள்ளார்.
சின்ன கலைவாணர் விவேக் தன்னுடைய 59-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.1961-ஆம் ஆண்டு கோவில்பட்டி பெருங்கோட்டூர் கிராமத்தில் பிறந்தார். விவேக் சிறு வயது முதலே புத்தக வாசிப்பின் மீதும் கலைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்தார். பின்பு குருப் தேர்வில் வெற்றி பெற்று சென்னை தலைமை செயலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். பின்பு, நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்பு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ’மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார்.
தன்னுடைய முதல் படத்திலேயே சமூக அவலங்களை சின்ன சின்ன பன்ச்கள் மூலம் பகடி செய்தவர் விவேக். பின்னாளில் அதையே தனக்கான பாணியாக மாற்றிகொண்டார். நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கவும் செய்தார். திருநெல்வேலி, பாளையத்து அம்மன், காதல் சடுகுடு போன்ற படங்களில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் சாமி படத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் சந்தித்த வேளை, திருமலை படங்களில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் என தன்னுடைய கதாபாத்திரங்களின் வழியாக சமூக சீர்த்திருத்தங்களுக்கான கருத்துக்களை அழுத்தமாக பேசினார். இதன் காரணமாகவே விவேக்கை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர்.
ரஜினிகாந்த் தொடங்கி சிம்பு, தனுஷ் இன்றைய தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாண் வரை அத்தனை முன்னணி நடிகர்களுடனும் பயணித்த விவேக் 34 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் கலை பயணத்தை கௌரவிக்கும் வகையில் 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறையும், பிலிம்பேர் விருதை 3 முறையும் வென்றிருக்கிறார் விவேக். இவருடைய உடல் மண்ணை விட்டு மறைந்தாலும் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான குரலாக காலம் கடந்தும் ஒலித்துகொண்டிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil