இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை தடுத்து நிறுத்தி துரத்திச் சென்ற இந்திய விங் கமாண்டர் அபி நந்தனின் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டதால், அவர் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் தரை இறங்கினார். அதன்பின் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
'நல்லெண்ண அடிப்படையில்' விடுதலை செய்யப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தாலும், உலக நாடுகளின் நிர்பந்தமே முக்கிய காரணம் என்கின்றனர் ராணுவத்தைச் சார்ந்தோர்.
அபிநந்தனுக்கு தற்போது உடலளவிலும், மனதளவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில், அபி நந்தனின் செயல்பாடுகளால் ராணுவம் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் இருந்த மரியாதை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய், ராணுவ வீரர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்ச் செல்வன் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் பணி நிமித்தம் ஜம்முவுக்கு திரும்புகிறார் என்ற செய்தியறிந்த விஜய், அவரை தொடர்பு கொண்டு, "பார்த்து ஜாக்கிரதையா இருங்க... ஒன்னும் கவலைப்படாதீங்க. நல்லபடியா போயிட்டு வாங்க.. ஒன்னும் ஆகாது. தப்பாவும், தவறாவும் ஒன்னும் நடக்காது. நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க.. நாம கண்டிப்பா மீட் பண்ணுவோம்" என்று தெரிவிக்க, நெகிழ்ந்து போனார் அந்த ராணுவ வீரர்.
இந்த ஆடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனால், அபி நந்தன் புயல் வீசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விஜய்யின் ஆடியோ வெளியாகி இருக்கிறது.
விஜய் பேசியது கூட பெரிய விஷயம் இல்லை... 'நான் விஜய் பேசுகிறேன்' என்று சொல்லும் போதும் கூட, சாதாரண மக்களைப் போல விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல், தனது பணிக்கான கெத்தோடும், மிடுக்கோடும் அந்த வீரர் விஜய்யிடம் பேசியது தான் ஹைலைட்!