தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வலம் வந்த நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலில் கலக்கி வருகிற நிலையில், நடிகை ரோஜா கபடி விளையாட்டில் களம் இறங்கி விளையாடிய வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் செம்பருத்தி சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்தி, பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை ரோஜா நடித்த உழைப்பாளி, வீரா, சூரியன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தன.
சினிமாவில் பிஸியாக இருந்த நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ரோஜா, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு அந்திர அரசியலில் களம் இறங்கினார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்த ரோஜா, ஆந்திராவில் முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அம்மாநில சட்டப்பேரவையில் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
நடிகை ரோஜா தற்போது ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக திகழ்கிறார்.
View this post on Instagram
இந்த நிலையில், தனது நகரி தொகுதியில் கபடி போட்டியைத் தொடங்கி வைக்க சென்ற ரோஜாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கபடி போட்டியைத் தொடங்கி வைத்த ரோஜா, யாரும் எதிர்பாரதா வகையில், தீடீரென கபடி போட்டியில் களம் இறங்கி இளைஞர்கள் உடன் கபடி விளையாடி உற்சாகப்படுத்தினார். ரோஜா கபடி ஆடியதைப் பார்த்த அப்பகுதி மக்களும் கபடி விளையாட்டு வீரர்களும் உற்சாகம் அடைந்து விசில் அடித்து கைத்தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆந்திர மாநில நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும் நடிகையுமான ரோஜா இளைஞர்கள் உடன் கபடி விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.