Afghan singer Sharafat Parwani : தாலிபான்கள் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி தலைமறைவானார். இந்நிலையில் தாலிபான்கள் ஆட்சிக்கு பயந்த ஆயிர கணக்கானோர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடி பெயர துவங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாடகர் ஷரஃபத் பர்வானி தன்னுடைய தாய்நாட்டை பற்றிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வேதனையால் சோர்வுற்ற என் தாயகமே, மருந்தின்றி காயத்துடன் இருக்கும் என் தாயகமே, மெல்லிசையும் பாடலுமின்றி களைத்திருக்கும் என் தாயகமே என்று அந்த பாடலுக்கான அர்த்தத்தோடு, தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் ஷரிஃப் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த பாடலை பதிவிட்டுள்ளார்.
இந்த பாடல் எப்போது பாடப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் பலரை மிகவும் கலங்க வைத்துள்ளது இந்த பாடல். இந்த பாடலை கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
சமயத்தில் வரிகள் புரியவில்லை என்றாலும், தாய் மண்ணை இழந்து, தாய்நாட்டை இழந்து, கடல் கடந்து அகதிகளாய் வேற்று மண்ணில் வாழும் மக்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது இந்த பாடலில் என்று நெட்டிசன்கள் உருக்கமாக தங்களின் கருத்துகளை இந்த பாடலுக்கு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil