ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசு பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று கல்வி கற்க தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களின் வீடியோக்கள் இன்னுமும் நாட்டில் இருந்து வெளிவருகின்றன.
இந்த நிலையில், தலிபான் கட்டளைக்கு எதிராக பெண் ஒருவர் கிராஃபிட்டியை பயன்படுத்தி போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஒரு சிறு குழந்தையை ஒரு கையில் பிடித்தபடி, பர்தா அணிந்த பெண் ஒரு சுவரில் "கல்வி, வேலை, சுதந்திரம்" என்று எழுதினார்.
இந்த தேதியிடப்படாத காணொலியை பத்திரிகையாளர் நாடிக் மாலிக்சாடா பகிர்ந்துள்ளார். அதில், “ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சமீபத்தில் அவர்கள் எதிர்ப்பின் ஒரு வடிவமாக கிராஃபிட்டியை ஆரம்பித்தனர்” எனத் தெரிவித்துள்ளார். முன்பு இந்தப் பெண்கள் விடுதலை என்பதற்கு பதிலாக உணவு என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர். அதாவது அவர்கள் பசியுடன் இருந்துள்ளனர்.
இது குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர், “கிராஃபிட்டி எப்போதும் எதிர்ப்பு மற்றும் சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கலை ஊடகமாக இருந்து வருகிறது, அதனால்தான் நான் தெரு கலைஞர்களை விரும்புகிறேன். அவளுடைய குரல் கேட்கப்படும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், “செயல்படும் சமுதாயத்தின் ஒவ்வொரு சிறிய விவரங்களிலும் பெண்கள் இருக்க வேண்டும், ஒரு ஆப்கானிஸ்தான் பெண் தனது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையைத் தொடர்வதைத் தடுக்க தலிபான்களுக்கு உரிமை இல்லை. தாலிபான்கள் பயங்கரவாதிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளி, பல்கலைக்கழகங்களில் பெண்களை அனுமதிக்க தலிபான்கள் 2022 டிசம்பரில் தடை விதித்தன. அப்போது இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
கல்லூரிகளில் உள்ள ஆண் மாணவர்கள் சக மாணவியரோடு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வகுப்பறையை விட்டு வெளியேறுவது மற்றும் போராட்டங்களில் கலந்துகொள்வது போன்ற வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/