ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர், ஆளுமை வாய்ந்த கேப்டன் ஆலன் பார்டர். 'செய் இல்லையேல் ஓடிவிடு' என்பதே இவரது தாரக மந்திரம். எப்பேற்பட்ட வீரனாக இருந்தாலும், ஃபார்மில் இல்லையென்றால் அணியைவிட்டு தூக்கும் மனநிலை கொண்டவர். அது ஸ்டீவ் வாக்காக இருந்தாலும் சரி சைமண்ட்ஸாக இருந்தாலும் சரி!.
ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட் போன்ற அப்போதைய இளைஞர்களை பெருமளவு ஊக்குவித்து ஆஸ்திரேலியாவை வீரநடை போட வைத்தவர் ஆலன் பார்டர்.
இப்போது எதுக்கு சம்பந்தம் இல்லாம, அவரைப் பற்றி பேசுறீங்க-னு தானே கேட்குறீங்க! சம்பந்தமே இல்லாத இடத்துக்கு அவர் போனதால், நாமும் சம்பந்தமே இல்லாம அவரைப் பற்றி பேச வேண்டியதா போச்சு!.
எங்கனு கேட்குறீங்களா? நித்யானந்தா ஆசிரமத்துக்கு!.
ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை வேற லெவலில் விளக்கிக் கூறி, உலக விஞ்ஞானிகளை அலற வைத்த நித்யானந்தா ஆசிரமத்திற்கு தான் ஆலன் பார்டர் சென்றுள்ளார். சென்றதோடு மட்டுமில்லாமல், நித்யானந்தாவை சந்தித்து பேசியிருக்கிறார்.
ஆலன் பார்டர் ஏன் அங்கு சென்றார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால், அங்கு நித்யானந்தாவின் தீவிர பக்தையான மா நித்ய நந்திதாவையும் ஆலன் சந்தித்து இருக்கிறார்.
வைரமுத்து பிரச்சனை வந்தபோது மா நித்ய நந்திதா, மிக 'அருமையான தமிழில்' பேசியிருந்தது அனைவரும் அறிந்ததே!. அந்த தீவிர பக்தை தான் ஆலன் பார்டருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக தளங்களில் பதிவிட்டிருக்கிறார். மேலும் 'விளையாட்டும், பக்தியும் ஒன்றிணைந்து உரையாற்றியது' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.