தமிழக அரசியலில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது உங்கள் தலைவர் கட்டியிருக்கும் வாட்ச் விலை என்ன? இதற்கு பணம் எங்கிருந்து வந்தது? வெளிநாட்டு வாட்ச் கட்டலாமா? என்பதுதான்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த, விலை உயர்ந்த கைக்கடிகாரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த கடிகாரத்தின் விலை, அதன் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட்டு, தேசியவாதி வெளிநாட்டு வாட்ச் கட்டலாமா என்று தி.மு.க ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.
தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, வெறும் 4 ஆடுகளே சொத்தாக வைத்திருக்கும் அண்ணாமலை ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச்சை எப்படி வாங்கினார். அதற்கான ரசீதை வெளியிடுவாரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, விரைவில் ரசீதை வெளியிடுவேன். எனது சொத்துக் கணக்கை வெளியிடுகிறேன். தி.மு.க அமைச்சர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், பா.ஜ.க-வினர் சிலர், தி.மு.க அமைச்சர் உதயநிதி கட்டியிருக்கும் வெளிநாட்டு வாட்ச்சின் விலை ரூ.14.37 லட்சம். இதற்கு பணம் எங்கே இருந்து வந்தது என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர். ட்விட்டரில் தமிழக அரசியலின் பரபரப்பு செய்தி அண்ணாமலை - உதயநிதி வாட்ச் விலை என்ன என்பதாக மாறியது.
இதனிடையே, தனது வாட்ச் பற்றி எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பதில் அளித்த அண்ணாமலை, “புதிதாக நான் அணிந்திருக்கும் வாட்ச், சட்டை, கார் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிருள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்மைத் தவிர வேறு யார் அதை வாங்குவார்கள். நம்முடைய நாட்டுக்காக இந்த வாட்ச்சைக் கட்டியிருக்கிறேன். ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். விமானம் வந்த பிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது. இந்த வாட்ச்சில் விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ச்சுகளில் 149-வது வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். இந்தியாவினுடைய எதிரிகள் இந்தியாவிலேயே சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறக் கூடாது என்பதற்காக, சீனா, பாகிஸ்தானுடைய ஏஜென்ட்டாக அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில், இது பழைய இந்தியா அல்ல. மோடி ஜியின் புதிய இந்தியா. அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அண்ணாமலை, “நான் கவுன்சிலரோ, ஊராட்சி மன்றத் தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசுப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட இப்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும், என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டிருக்கிறது. திமுக-வினர் எனது உடைகள், கடிகாரம், கார் குறித்துக் கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்யவிருக்கிறேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லவிருக்கிறேன். எனது நடைப்பயணத்தைத் தொடங்கும்போது, நான் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வான 2010-11-ம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை மக்களுக்குச் சமர்ப்பிக்கவிருக்கிறேன். கடந்த 13 ஆண்டுகளில் நான் செய்த அனைத்துச் செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்யவிருக்கிறேன். 500 ரூபாய் கொடுத்து நான் படத்துக்குச் சென்றிருந்தாலும் அது பதிவாகியிருக்கும். தமிழக அரசியலில் முதன்முதலாக என்னுடைய வாழ்க்கை முழுவதையும் தமிழக மக்களுக்குத் திறந்து காட்டப்போகிறேன்” என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக திமுக மாணவர் அணித் தலைவர் இராஜீவ் காந்தி, “ராகுல் காந்தியின் டி-சர்ட்டை வைத்து அரசியல் செய்த பாஜக-வினர் போல், வாட்ச்சை வைத்து இழிவான அரசியல் செய்யும் நோக்கம் தி.மு.க-வினருக்கு இல்லை. ஏன் இது விவாதப் பொருளாகிறது என்றால் மேடைக்கு மேடை, `சாதாரண எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்’ என்று புனிதம் பேசி, எளிமையானவன் என்று விளம்பரம் செய்யும்போதுதான் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா என்று கேள்வி வருகிறது. எந்த தி.மு.க அமைச்சரும் கொள்கை அடிப்படையில்தான் பிரசாரம் செய்துவருகிறாரே தவிர நூறு ரூபாய்க்குச் செருப்பு போட்டோம் என்று பிரசாரம் செய்வதில்லை. அவர் கட்டியிருக்கும் வாட்ச் பரிசாகவோ அல்லது பணம் கொடுத்து வாங்கியோ இருப்பது அவரின் விருப்பம். அதில் இங்கு யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வாட்ச் மீதான ஒரு புனிதத்தைக் கற்பித்து, தேசபக்தி என்கிற பெயரில் ஒரு கோமாளித்தனமான நாடகத்தை அரங்கேற்றுவதுதான் சிக்கலாக இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது சொந்தக் கட்சிக்காரர்களையே வேவு பார்ப்பதாக அண்ணாமலை மீதிருக்கும் குற்றச்சாட்டை திசைதிருப்பும் வேலையோ என்கிற எண்ணம் வருகிறது. அமைச்சர் கேட்ட பிறகு 2021-ல் வாங்கியதாகப் பொய் சொல்கிறார். ஆனால், இந்த வாட்ச் 2016-லேயே வாங்கியதாகத் தகவல். பெங்களூர் சிட்டியில் போலீஸ் கமிஷனராக இருந்தபோது, அங்கு ஒரு காபி நிறுவனத்துக்குப் பஞ்சாயத்து தீர்த்துவைத்ததற்குப் பரிசாகக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பெரும் காபி நிறுவனத்தில் சட்டவிரோத மீறல்கள், பல உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. அதற்கான கைமாறாக வாங்கியிருப்பாரோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. குற்றச்சாட்டாக வைக்கவில்லை. அதனால்தான், அந்த பில்லை வெளியிடச் சொல்கிறோம். வாய்ப்பிருந்தால் அண்ணாமலை பத்து கோடி ரூபாய்க்குக்கூட வாங்கிக் கட்டட்டும். நாங்கள் பணக்கார அண்ணாமலை, பண்ணையார் அண்ணாமலை என்று சொல்லிவிட்டுப் போகிறோம்” என்று கூறினார்.
பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “பில் குறித்து பேசுவதற்கு செந்தில் பாலாஜிக்கு தகுதி, அருகதை கிடையாது” என்று கூறுகிறார். “பல கோடி ரூபாய்க்கு மக்களிடம் மது விற்பனை செய்து வருமானம் ஈட்டும் மதுக்கடைகளில் இருக்க கூடிய மதுவுக்கு முதலில் மக்களுக்கு பில் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு வேறு யாரிடமாவது பில் கேட்கலாம். நீதிமன்றம் பல முறை பில் கொடுக்கச் சொல்லி சொல்லிவிட்டது. இன்னும் அவர்கள் பின்பற்றவில்லை என்றால் லஞ்சம், ஊழல் புரையோடி இருக்கிறது என்றுதானே அர்த்தம்… அதனால் மற்றவர்கள் குறித்துப் பேசுவதற்கு தகுதியே இல்லாதவர்கள் பேசுவதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், எங்கள் மாநிலத் தலைவர் ‘வாட்ச் குறித்து சொல்வதற்குத் தயார்…’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். அதேபோல் உதயநிதி, சபரீசன், ஸ்டாலின் ஆகியோர் பயன்படுத்தும் பொருள்களைப் பட்டியலிட்டு பில் கேட்டால் கொடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை - உதயநிதி வாட்ச் விலை என்ன என்று தி.மு.க ஆதரவாளர்களும் - பா.ஜ.க ஆதரவாளர்களும் ட்விட்டரில் மோதி வருகிறார்கள்.
பா.ஜ.க ஆதரவு அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், “ரஃபேல் வாட்ச் அணிவது தேசபக்தி அல்ல. கிட்டத்தட்ட அரை டஜன் நாடுகள் ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளன. அதனால், இந்த வாதம் எடுபடாது. வாங்கிய விவரங்களை வெளியிடாதது அண்ணாமலை மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கும். தி.மு.க.வுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. அவர்களை நேர்மையானவர்கள் என்று மக்கள் கருதுவதில்லை.
இன்று திருப்பூரில் அண்ணாமலையின் பேச்சைப் பார்த்தேன். அனல் பறந்தது. ஆனால், இன்னும் கடிகாரம் வாங்கிய விவரங்கள் வெளியிடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏப்ரலில் வெளியிடுவேன் என்று சொல்வது பங்கம். அதை இப்போதே செய்ய வேண்டும். ஐடி விங் ஏற்கனவே மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து வருகிறது. பெரிய அளவில் கொள்ளையடிப்பவர்கள் கூட உங்கள் நம்பகத்தன்மையை வெறும் 5 லட்சம் ரூபாயை வைத்து சேதப்படுத்தலாம்.
பரிசாக இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். யார் பரிசளித்தது என்று சொல்லுங்கள். வாங்கிய விவரம் இல்லை என்றால் அதை வெளிவே கூறுங்கள். இன்னும் அண்ணாமலை பிரச்னையை திசை திருப்பினால், அவரது நம்பகத்தன்மை பாதிக்கப்படும். நீங்கள் ஒரு தவறைப் பற்றி வெளிப்படையாக இருந்தால் மக்கள் மன்னிப்பார்கள். நீங்கள் திசைதிருப்பினால் அவர்கள் அதைப் பார்ப்பார்கள்.
ஒருமுறை இழந்த நம்பகத்தன்மையை மீண்டும் பெறுவது கடினம். குறிப்பாக நீங்கள் தார்மீக உயர்நிலையைக் கோர விரும்பினால். மக்கள் அவரை ஒருமுறை திமுக/அதிமுக அரசியல்வாதிகளுடன் ஒப்பிட ஆரம்பித்துவிட்டால், அண்ணாமலையின் நேர்மையான புதிய முகம் தொலைந்து போகும். இது ஒப்பீட்டளவில் சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால், அவருக்கு இது ஒரு அக்னி பரீட்சை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க ஐ.டி விங் அண்ணாமலை வாட்ச் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில், “ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் 🐐க்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள்.
- உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா?
- ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?
- ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?
- நான் தேசியவாதி அதனால ரபேல் வாட்ச் கட்டியிருக்கேன் சொல்ற நீங்க, உண்மையான தேசியவாதின்னா பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் வாட்சை கட்டாமல், இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவன வாட்சைத் தானே கட்டியிருக்கணும்? அப்போ நீங்க தேச துரோகியா?
- அட குறைந்தபட்ச தேசியவாதியா தமிழ்நாடு அரசு முதலீடு (TIDCO) செய்திருக்கும் TITAN வாட்சையாவது வாங்கிருக்கலாம் இல்லன்னா HMT வாட்சாவது வாங்கி தங்கள் தேசப்பற்றை காட்டியிருக்கலாமே!
பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation வாட்ச்ல தான் உங்க தேசப்பற்ற காட்டுவீங்களா?
- ரபேல் வந்ததுக்கு பிறகு இந்திய ராணுவத்தின் Rules of War மாறியிருக்குன்னு சொல்றிங்களே, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா காலனி அமைப்பதும் அருணாச்சல் பிரதேஷ் பார்டரில் இந்திய இராணுவம் குச்சிகளைக் கொண்டு சண்டையிடுவதும் தான் மாறிப்போன Rules of War-ஆ?
- 500 லிமிட்டட் எடிசன் வாட்ச்களில் 149வது வாட்சை கட்டியிருப்பதாக பீற்றிக்கொள்பவரே.
ரபேல் ஊழலை மறைக்க இந்த ரேர் கலெக்சன் உங்களுக்கு வழங்கப்பட்டதா?
யார் குடுத்தா?
எங்கே வாங்கினீர்கள்?
அதன் ரசீது எங்க?
எவ்வளவு வரி கட்டினீர்கள்?
2நாளாச்சு இன்னுமா பில்ல தேடுறிங்க?
- 5000 கோடி ரூபாயினை அமெரிக்காவுக்கு கொண்டு போன போது கண்டுகொள்ளாதவர்கள் இதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்தீர்களா?
இல்லை அந்த 5000 கோடி ரூபாயில் வாங்கியது தானா இந்த பத்து லட்சம் ரூபாய்
இம்போர்டட் கடிகாரம்?
- விஷயத்துக்கு வருவோம்,
யாரோ ஒருவர் பத்து லட்சத்தில் வாட்ச் கட்டுவதில் தவறில்லை.
"ரெண்டு ஆடு வச்சிருக்கேன், நான் ஒரு விவசாயி" என பொது வெளியில் கபட நாடகம் 'ஆடு'ம் ஒருவருக்கு பத்து லட்சத்துல வாட்சு எப்படி வந்தது என்பதே கேள்வி!
- #MakeInIndia பிரச்சாரத்தால் இந்தியர்களை ஏமாற்றிவரும் உலகம் சுற்றும் வேடதாரியின் திட்டத்திற்கு அவரது கட்சியைச் சார்ந்த நீங்களே கொடுக்கும் மரியாதை இதுதானா?
பிரான்ஸ் பிராண்ட பகுமானமா வாங்கி மாட்டிக்கிறது தான் மேக் இன் இந்தியாவா?
- சுருக்கமாக ஆடு மேய்க்கும் ஒருவருக்கு பத்துலட்சம் ரூபாய் வாட்ச் வந்தது எப்படி?
- ரபேல் ஊழலை மறைக்க கொடுத்த கமிசனா?
- அமெரிக்காவுக்கு கொண்டு போன 5000 கோடியில் வாங்கிய பர்சனலா?
- ஹனிடிராப் செய்து தொழிலதிபர்கள்/ பாஜகவினரிடமே பறித்த பணத்தில் வாங்கியதா?
குறிப்பு: மேல குறிப்பிட்ட கேள்விகள் சம்மந்தப்பட்டவரே வான்டடா வந்து வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட பேட்டியில் இருந்தும்,
பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களே கொடுத்த தகவல்களின்படியும் கேட்கப்பட்டவை.
பதில் வருதா பாப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளது.
சில பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள், “தி.மு.க கட்சி நிதியில் ஊழல் என்று கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் மீதும், தி.மு.க ஆட்சியில் ஊழல் என்று கணக்கு கேட்கும் அண்ணாமலை மீது திறனற்ற தி.மு.க வைக்கும் ஒரே எதிர் விமர்சனம் வாட்ச்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அண்ணாமலை அணிந்திருக்கும் ரஃபேல் வாட்ச் சர்ச்சை குறித்து, தி.மு.க - பா.ஜ.க இருதரப்பு ஆதரவு நெட்டிசன்களும் ட்விட்டரில் #RafaleWatchScam மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள். அதில் ஓரளவு நாகரீகமான மீம்ஸ் கம்மெண்ட்களை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம்.
ஒரு நெட்டிசன், இது எங்க போயி முடியப்போகுதோ என்று வடிவேல் பாணியில் கூறுவதாக ஒரு மீம்ஸ் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், தி.மு.க-காரர்கள் வடிவேலு பாணியில் சொல்வது மாதிரி, “வேணா மிஸ்டர் அண்ணாமலை இத்தோட நிப்பாட்டிக்கோ. அப்படி என் கட்சிக்காரன் என்னய்யா கேட்டான். மூனரை லட்ச ரூவா வாட்ச் கட்டிருக்கியே பில் இருக்கான்னு கேட்டான். பில் இருந்தா காட்டு, இல்லேனா இல்லேன்னு சொல்லிட்டுப் போ. அத விட்டுட்டு எங்க ஓனரோட சொத்து கணக்கு வரைக்கும் தோண்டி எடுக்குறது என்ன பழக்கம்” என்று கிண்டலாக மீம்ஸ் போட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், செந்தில் - கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழம் காமெடியை மீம்ஸாக போட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.