ஓலா, உபேர் உள்ளிட்ட கால்டாக்ஸி நிறுவனங்கள் மூலம் பலருடைய பயணங்களும் இன்று எளிதாகியுள்ளது. அந்நிறுவன கால்டாக்ஸி ஓட்டுநர்களிடம் செல்போனிலேயே தொடர்புகொள்கிறோம். ஆனால், பேச முடியாத, அல்லது காது கேளாதவர்கள் எப்படி கால் டாக்ஸி ஓட்டுநர்களை தொடர்புகொள்வார்கள் என்பதை சிந்தித்ததுண்டா? காது கேளாத இளைஞர் ஒருவர் இந்த கேள்வியை முகநூலில் எழுப்பியிருக்கிறார்.
ஐஐஎம் பெங்களூருவில் படித்துவரும் அந்த இளைஞர் பிறவியிலேயே காது கேட்கும் திறனை இழந்தவர். ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் படிக்கும் பள்ளியில் படித்தார். படிப்பில் கெட்டிக்காரரான இவர், 10-ஆம் வகுப்பில் 95% மதிப்பெண்கள் எடுத்தார். 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, தற்போது ஐஐஎம் பெங்களூருவில் படித்து வருகிறார்.
பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோரின் உறுதுணையால் தான் இது சாத்தியமானதாக தெரிவிக்கிறார்.
“எனக்காக நிறைய பேர் உதவியிருக்கின்றனர். நான் இப்போது அதனை திருப்பி செய்ய வேண்டிய காலம். காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”, என்கிறார் அந்த இளைஞர்.
”பலமுறை கேப் ஓட்டுநர்கள் என்னுடைய பயணத்தை ரத்து செய்துவிடுவார்கள். ஏனென்றால், என்னால் அவர்களின் செல்போன் அழைப்பை ஏற்க முடியாது. அதனால், கேப் நிறுவனங்கள், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்காக தங்களுடைய ஆப்பில், நாங்கள் புக் செய்யும்போது எங்களை ‘காது கேளாதோர்’ என திரையில் ஒளிக்கவிடும் வகையில் அப்டேட் செய்ய வேண்டும். அதனால், ஓட்டுநர்கள் எங்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தொடர்புகொள்ளலாம். இதனால், எங்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். #MakeUberAccessible மற்றும் #MakeOlaAccessible எனும் இணைய பிரச்சாரம் மூலம் இதனை சாத்தியமாக்குவோம்”, என குறிப்பிட்டுள்ளார்.