அஸ்ஸாமைச் சேர்ந்தவர் தனது கனவு ஸ்கூட்டர் வாங்க சேமித்த ரூ.90,000 நாணயங்களை ஷோரூமுக்கு மூட்டை கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாணயங்களை பொறுமையாக சேமித்து வைத்ததையும் அந்த நாணயங்களை ஏற்றுக்கொண்ட ஷோரும் உரிமையாளரையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அஸ்ஸாமைச் சேர்ந்த எம்.டி. சைதுல் ஹோக் தனது கனவு ஸ்கூட்டர் வாங்க சேமித்த ரூ. 90,000 நாணயங்களை மூட்டை கட்டி, ஷோரூமுக்கு எடுத்துச் சென்று ஸ்கூட்டர் வாங்கினார்.
நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தாங்கள் சேமிக்கும் பணத்தில் முதல் வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக சேமித்த பணத்தில் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ஆனால், அதை வித்தியாசமாக செய்திருக்கிறார்.
அஸ்ஸாம், தர்ராங் மாவட்டம், சிபாஜார் பகுதியில் வசிக்கும் எம்.டி சைதுல் ஹோக், தான் சேமித்து வைத்திருந்த நாணயங்களை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று ஒரு ஸ்கூட்டர் வாங்கியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. எம்.டி. சைதுல் ஹோக் சாக்கு பையில் கட்டப்பட்ட நாணயங்களின் மூட்டையுடன் ஸ்கூட்டர் வாங்க ஷோரூமுக்கு செல்வதைக் காட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
“நான் போராகான் பகுதியில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறேன், ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது எனது கனவு. நான் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். இறுதியாக, நான் என் கனவை நிஜமாக்கி இருக்கிறேன். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று எம்.டி. சைதுல் ஹோக் கூறினார்.
இந்த செய்தியை டி.வி-யில் பார்த்த ஷோரூம் உரிமையாளர், ஒரு வாடிக்கையாளர் ரூ.90,000 நாணயங்களை மூட்டையாக எடுத்து வந்து ஸ்கூட்டர் வாங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இவர் எதிர்காலத்தில் கார் வாங்குவார் என்றும் வாழ்த்தினார்.
ரூ. 90,000 நாணயங்களை சேமித்து வைத்த இந்த நபரின் பொறுமையால் நெட்டிசன்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த நாணயங்களை ஏற்றுக்கொண்டதற்காக ஷோரூம் உரிமையாளரையும் பாராட்டினர்.
“அந்த ஷோரும் விற்பனையாளரும் பாராட்டப்பட வேண்டும். இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“இப்போது டீலருக்குப் பாராட்டுக்கள், நாணயங்களை வாங்குவதில்லை, குறிப்பாக கர்நாடகாவில் எந்தக் கடைக்காரரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை, இதை நான் தனிப்பட்ட முறையில் கவனித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன்” என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
“பெரும்பான்மையினர் தனிநபர் கடனில் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் உலகில், தனது கனவை நிறைவேற்றுவதற்காக பல வருடங்களாக உழைத்து சேமித்த ஒருவர் இங்கே இருக்கிறார்….இந்த நாணயங்களை எண்ணும் பணியை வழங்கிய ஷோரூமில் உள்ள கணக்காளர் / விற்பனையாளருக்கும் எனது வணக்கம்.” என்று மற்றொரு நெட்டிசன் பாராட்டினார்.
கடந்த மாதம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், அஸ்ஸாம், பார்பேட்டா மாவட்டம், ஹவ்லி என்ற இடத்தில் உள்ள ஸ்கூட்டர் ஷோரூமில், தான் சேமித்து வைத்திருந்த நாணயங்களுடன் இரு சக்கர வாகனத்தை வாங்கினார். அடையாளம் தெரியாத அந்த நபர், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 7-8 மாதங்களாக நாணயங்களை சேமித்து வைத்ததாக வீடியோவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“