/tamil-ie/media/media_files/uploads/2023/04/Aus-cons-Panguni.jpg)
பங்குனி திருவிழாவை கண்டுகளித்த ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ்
பங்குனி திருவிழாவை கண்டுகளித்த ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ்
தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் தமிழகத்தின் பங்குனி விழாவைக் கண்டு மகிழ்ந்ததைப் பார்த்த ட்விட்டர் பயனர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதரக துணைத் தூதர் சாரா கிர்லேவ் சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி திருவிழாவின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தேரோட்டப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாரா கிர்லேவ் பகிர்ந்துகொண்டார்.
ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ் பங்குனி தேரோட்ட கொண்டாட்டங்களைப் பற்றி ட்விட்டரில் குறிப்பிடுகையில், “உண்மையில் அற்புதமான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார். கற்பூரம், மல்லிகை வாசனை மற்றும் தேர் இழுக்கும் உத்வேகம் ஆகியவற்றால் நிரம்பிய சூழல் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
Delighted to witness the joyful Panguni festival in #Mylapore this morning. The majestic hand pulled ‘Ther' chariot, colourful clothes and kolams, and all smelling beautiful with rich camphor and jasmine in the air. Truly a wonderful experience of #SouthIndia in #Chennai. pic.twitter.com/VMKSL48H2w
— Aus Consulate Chennai (@AusCGChennai) April 3, 2023
“இன்று காலை மயிலாப்பூரில் பங்குனித் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்தேன். கம்பீரமான கைகள் தேர் இழுத்தது. வண்ணமயமான ஆடைகள், கோலங்கள், மற்றும் காற்றில் செழுமையான கற்பூரம் மற்றும் மல்லிகை வாசனையுடன் அழகாக இருந்தது. உண்மையிலேயே சென்னையில் தென்னிந்தியாவின் அற்புதமான அனுபவம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் தென்னிந்திய விழாவை ரசித்ததைக் கண்டு ட்விட்டர் பயனர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு ட்விட்டர் பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “நீங்கள் தமிழ்நாட்டுத் திருவிழாவின் உற்சாகத்தை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.. கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய ஆசீர்வதிப்பாராக!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனர், “பார்க்க அற்புதமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது ட்விட்டர் பயனர், “இது தென்னிந்தியாவின் அழகு, கலாச்சார மரபுகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியது.” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் ஆஸ்திரேலியாவின் நலன்களுக்காக ஆஸ்திரேலிய துணைத் தூதரக அலுவலகம் செயல்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முக்கிய சிவன் கோவிலான கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை நடைபெறுவது வழக்கம். ஒன்பது நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி ஏழாம் நாள் 63 நாயன்மார்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது, சிவபெருமானின் அவதாரமான கபாலீஸ்வரர் மற்றும் சக்தி தேவியின் அவதாரமான கற்பகாம்பாள் ஆகியோரைப் பின்தொடர்ந்து, 63 நாயன்மார்கள், சிவபெருமானின் அருளைப் பெற்ற துறவிகளின் சிலைகளின் பெரிய ஊர்வலம் மற்றும் தெய்வங்களின் திருமஞ்சனத்துடன் நிறைவடைகிறது என்று தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.