ஆஸ்திரேலியா கிரிகெட் அணி சந்தித்த நெருக்கடி... டுவிட்டரில் ரசிகர்கள் சோகம்

தினந்தோறும் ட்விட்டரில் பலவகை தலைப்புகள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வரும். அவ்வாறான கருத்துகளில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த தலைப்புகளை நாம் கண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் இன்றைய முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர்களின் பதவி ராஜினாமா.
1. #stevesmith
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்தது. அந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பந்தை சேதப்படுத்திய புகாரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்மித், தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் துணை கேப்டன் டேவிட் வார்னரும் பதவி ராஜினாம செய்துள்ளார்.
2. #ban_sterlite
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் வீரியம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மார்ச் 24-ம் தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அதிக கவனம் பெற்று வருவதால், போராட்டம் மேலும் வீரியம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. #erode
ஈரோடு மண்டல திமுக மாநாடு நேற்று (மார்ச் 24) தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பெருமளவில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் மாநாட்டில் நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். இன்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுப் பேரூரை ஆற்ற உள்ளனர். இதில் முக்கிய தலைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து காலை பேசப்பட்டது. திமுக.வின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பெருவாரியான தொண்டர்கள் முகாமிட்டிருக்கும் ஈரோடு நோக்கியே அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
4. #RahulGandhi
பிரதமர் மோடியின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பொதுமக்களின் தகவலை திருடி அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுப்புவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். . கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், 50 மில்லியக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி திருடியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் ஆப் பொதுமக்களின் தகவல்களை திருடி அமெரிக்காவுக்கு கொடுப்பதாக ராகுல் காந்தி சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார். அக்கருத்தில், பேஸ்புக்கை விட அதிக தகவல்கள் திருட்டில் மோடியின் ஆப் ஈடுபட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
5. #MersalAlbum
கடந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வெளியானது. இதில் 3 காதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் பெரும் வெற்றியைத் தழுவியது. திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே ‘ஆளப்போறான் தமிழன்’ பாடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் பாடல் ‘சாவன்’ என்ற பாட்டு செயலியில் ஒரு கோடி பேர் கேட்டுள்ளனர். இதனை அப்பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்தச் செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close