திமுகவுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள நிலையில், அவரை அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை நேற்றிரவு (திங்கள் கிழமை) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக இயக்கம் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் என்றைக்கும் செயல்படும். இதனை எங்கள் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது என அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்”, என கூறினார்.
திமுக கூட்டணியிலிருந்து விலகிய வைகோ, இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்டு மாதம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நெகிழ்ச்சியில் வைகோ கண்ணீர் சிந்தியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மதிமுக ஆதரிக்கும் என வைகோ அறிவித்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திலும் வைகோ கலந்துகொண்டார்.
இந்நிலையில், நேற்று கருணாநிதியை சந்தித்த வைகோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறியிருக்கிறார்.
இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோவை, அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
அதில், "அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ். பாவம் நாங்க”, என பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் கருத்திட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததற்கு காரணம் வைகோ, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுதான் காரணம் என நெட்டிசன்கள் கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.