கோவை, மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பாகுபலி யானை, வனத்துறையினரைக் கண்டதும் பிளிறிய படி துரத்தியது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காட்டு யானை,காட்டெருமை,மான், உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக அதிகாலை வேளைகளில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் சாலையைக்கடந்து மறுபுறம் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இதைத் தொடர்ந்து மாலையில் விளை நிலங்களில் இருந்து மீண்டும் சமயபுரம் வழியாக சாலையைக்கடந்து வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
குறிப்பாக இதுவரை பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியது இல்லை என்றாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காலை - மாலை வேளைகளில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவே அச்ச ப்படுகின்றனர்.
மேலும் மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் பாகுபலி யானை சாலையினை கடக்கும் வேளைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை சமயபுரம் பகுதியில் சாலை கடக்க முயன்ற யானை சாலையில் வனத்துறையினர் நிற்பதை கண்டதும் ஆவேசமடைந்து பிளிறியபடியே வனத்துறையினரை துரத்தியது.
இதனால், வனத்துறையினர் அச்சமடைந்து தெறித்து ஓடினர். பின்னர், சற்று நேரத்தில் யானை சாலையைக் கடந்து சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"