மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம்,காந்தவயல், உளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இதனால், அவ்வப்போது காட்டு யானை,மான், காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வணப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகின்றன.
அவ்வாறு ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் பயிர்களை சேதம் செய்வதோடு,மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இப்பகுதிகளில் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு லிங்காபுரம் மூக்கு வளைவு பகுதி வழியாக பாகுபலி யானை ஜாலியாக சாலையிலேயே வாக் செய்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பாகுபலி யானையை நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னரே அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து தங்களது வாகனங்களை எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் கடந்த பல மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அதன் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் விளைநிலங்களில் இரவு நேரங்களில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஊருக்குள் உலா வந்தது.
தொடர்ந்து சாலையிலேயே பாகுபலி யானை முகாமிட்டது.இதனால் எங்களது பகுதியில் வசிக்கும் மக்கள் சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு ஊர் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே,பாகுபலி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் கூடுதல் ரோந்து காவலர்களை நியமித்து ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“