பெங்களூரில் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு பெண் போலீசார் ஒருவர் , தாய்பால் ஊட்டிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூரில் உள்ள தெரு ஒன்றில் கடந்த 6 ஆம் தேதி குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடப்பதாக பெங்களூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல் துறையினர் குப்பைக் கிடங்கில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையின் உடலில் இருந்த இரத்த காயங்களை வைத்து குழந்தை பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆனது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகும் குழந்தை பசியால் விடாமல் அழுதுக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த பெண் போலீஸ் அர்ச்சனா யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் குழந்தையை தூக்கி பாலூட்டி பசியை ஆத்தினார்.
இதைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அர்ச்சனாவின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. பல தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தனர். கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண் போலீஸ் அர்ச்சனாவிற்கு தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
We salute our COP Smt. Archana, @BlrCityPolice ,for her kind motherhood affection of breastfeeding and rescuing an abandoned infant, while in her maternity.
— BengaluruCityPolice (@BlrCityPolice) 6 June 2018
இந்நிலையில், இதுக்குறித்து மனம் திறந்துள்ள அர்ச்சனா “ பசியால் அந்த பச்சிளம் குழந்தை அழும் போது நான் ஒரு போலீஸ் என்பதையும் தாண்டி , நானும் ஒரு குழந்தைக்கு அம்மா என்பது தான் எனக்கு நினைவில் வந்தது. எனக்கும் சமீபத்தில் தான் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அவனை வீட்டில் விட்டு விட்டு தான் தான் பணிக்கு வந்து செல்கிறேன்.
அந்த குழந்தை அழும் போது வீட்டில் இருக்கும் என் மகன் எனக்கு நினைவில் வந்துவிட்டான். உடனே, குழந்தையை தூக்கி பாலூட்டினேன். இதில் கொண்டாடும் அளவிற்கு ஏதும் இல்லை. பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அர்ச்சனாவின் மனிதாபிமானம் மிக்க செயல் பலரின் கவனத்தையும், வாழ்த்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.