கோவை வாலாங்குளம் நிரம்பி உபரி்நீர் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் ஓடியது. இதில் பெரிய பெரிய மீன்கள் சில சாலையில் அடித்து வரப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவற்றை பிடித்து சென்றனர்.
தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று பெய்த மழை காரணமாக சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளம் நிரம்பியது.
இதனைதொடர்ந்து உபரி நீர் ராஜவாய்க்கால் வழியாக சிங்காநல்லூர் குளத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது. இதில் உபரி நீர் செல்லும் ராஜவாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறி இன்று காலை சாலையில் ஓடியது. சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வெளியேறியது.
இந்நிலையில் வாய்க்காலில் இருந்து நீர் வெளியேறிய போது அதில் இருந்து பெரிய மீன்களும் வெளியேறி சாலையில் அடித்து செல்லப்பட்டது. அவற்றை வாகன ஓட்டிகளும், உள்ளூர் வாசிகளும் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர் . இதனிடையே தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரி செய்தனர். இதையடுத்து சாலையில் ஓடிய தண்ணீர் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“