பிகாரில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளைத் தாக்கி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர முயன்ற இரண்டு இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கைது செய்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
பிகாரில் உள்ள நாக்ரி ஹால்ட் ரயில் நிலையம் அருகே வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளை இளைஞர்கள் சிலர் கம்புகளால் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை உடனடியாகக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், அந்த வீடியோவில் இருந்த இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருவதாக ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது. இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மற்றவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், தாக்குபவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. மேலும், இதுபோல ஆன்லைன் புகழ் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், "பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இதுபோன்ற சம்பவங்களைக் கடுமையாகக் கையாள வேண்டும்" என்றும், "இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.