இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் வனவிலங்குகளைப் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இடையே வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உரையாடல்களை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பொதுவாக மக்களிடையே காடு பற்றிய ஆர்வமும் வனவிலங்குகளைப் பற்றிய அச்சமும் இருக்கவே செய்கிறது. மக்களிடையே வனவிலங்குகளைப் பற்றிய தப்பெண்ணத்திற்கு முக்கியக் காரணம் வனவிலங்குகளின் மீதான அச்சம்தான். இந்த மாதிரி மக்கள் மத்தியில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை மீதான அச்சத்தைப் போக்குவதற்கு சில வீடியோக்கள் உதவுகின்றன.
அந்த வகையில், ஒரு விலங்கியல் பூங்காவில் பெண் ஒருவர் புலிக்கு முதுகு சொரிந்துவிடுகிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ நேச்சர் இஸ் அமேஸிங் (@AMAZlNGNATURE) என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஒரு பெண் சீப்பு போன்ற ஒரு குச்சியை வைத்து புலியின் முதுகில் சொரிந்துவிடுகிறார். அதில் உதிரும் புலியின் முடிகள் பிச்சிக்கொண்டு வருகின்றன. அவற்றை கையில் எடுத்து போடுகிறார். மீண்டும் புலியின் முதுகை சொரிந்துவிடுகிறார்.
நீங்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண் கதையைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், விலங்கியல் பூங்காவில் உள்ள புலிக்கு அச்சமில்லாமல் முதுகு சொரிந்துவிடும் பெண்ணைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“