டுவிட்டரில் நிறைந்து வழிந்தோடும் காவிரி விவகாரம்... இன்றைய டாப் டிரெண்டிங்கை பிடித்தது காவிரி.

முக்கிய விவாதமான காவேரி விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதங்கள் இன்று முடிவுக்கு வந்துள்ளன. இன்றைய டாப் டிரெண்டிங்கில் காவிரிதான் முதலிடம்.

தமிழகத்தில் இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. விவாதங்களுக்குப் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விவாதமான காவேரி விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதங்கள் இன்று முடிவுக்கு வந்துள்ளன. இன்றைய டாப் டிரெண்டிங்கில் காவிரிதான் முதலிடம்.

#CauveryManagementBoard

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பை பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களில் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சியினரும் நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமர் நேரம் ஒதுக்கித் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

#LaunchOfYellowArmy

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. கடந்த 2016-17 இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வருத்தத்தில் இருந்தனர் சி.எஸ்.கே ரசிகர்கள். இன்று மீண்டும் சென்னை அணி துவங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அதன் முடிவில் தோனி, ரெய்னா, முரளி விஜய், பிராவோ, டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா அம்பதி ராயுடு, வாட்சன் உள்ளிட்ட 25 வீரர்கள் அணியில் உள்ளதாக விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிராவோ, “சென்னை அணிக்குத் திரும்பியது சொந்த மண்ணுக்குத் திரும்பியது போல் உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

#Puducherry

பாஜக-வை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும், எம்எல்ஏக்களை நியமிக்காமல் இருந்தது. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி பாஜக-வை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தார். அப்பட்டியலில் பாஜகவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர், பாஜகவைச் சேர்ந்த தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது. பின்னர் மூவரும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை பாஜக கொண்டாடி வந்தாலும், காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#BrahMos

உலகின் அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் என்ற பகுதியில் இன்று காலை பிரமோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது உலகிலேயே மிக வேகமான ஏவுகணையாகும். ஒலியை விட மூன்று மடங்கு வேகமாகப் பயணித்து, 290 கிமீ தூரத்திற்கு சென்று இலக்கைத் தாக்கக்கூடிய சிறந்த அம்சத்தைக் கொண்டுள்ளது. இதனை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள நதிகள் பிரம்மபுத்ரா மற்றும் மோஸ்க்வா ஆகியவற்றின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஏவுகணை தான் இந்த பிரமோஸ்.இந்த ஏவுகணை உருவாக்கும் முயற்சியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஏவுகணை சோதனையில் வெற்றிபெற்றதை தொடந்து இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

#KammaraSambhavam

‘கம்மர சம்பவம்’ திரைப்படத்தின் 4-வது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ராதிஷ் அம்பத் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் திலீப் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகி வருகிறது ‘கம்மர சம்பவம்’ திரைப்படம். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் மற்றும் விளம்பர பட இயக்குநரான ராதிஷ் அம்பத் இயக்கி வருகிறார். கம்மர சம்பவம் நடிகர் சித்தார்த்தின் முதல் திரைப்படமாகும். மேலும் பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், சுவேதா மேனன், முரளி கோபி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்து வருகிறார். இதுவரை 3 போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து 4-வது போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close